அமர்நாத் யாத்ரீகர்கள் பயணத்தின் போது பேருந்தின் பிரேக் செயலிழந்த நிலையில், பெரும் விபத்தில் இருந்து பயணிகள் தப்பினர்.
ஜம்மு-காஷ்மீர் ராம்பன் மாவட்டத்தில் செவ்வாயன்று இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்கு அமர்நாத்தில் இருந்து 40 பயணிகளை ஏற்றிக்கொண்டு ஹோஷியார்பூருக்கு பேருந்து ஒன்று சென்றுள்ளது. அப்போது, அந்த பேருந்து திடீரென பிரேக்கை இழந்தது. இதனால், 40 பயணிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டது. இதையடுத்து, பேருந்தில் இருந்து பயணிகள் வேகமாக குதிக்க தொடங்கினர்.
கீழே விழுந்தவர்களுக்கு சின்ன சின்ன காயங்களும் ஏற்பட்டது. இருப்பினும், பேருந்தில் பலரும் இருந்த நிலையில், பேருந்து நிற்காமல் மெதுவாக பள்ளத்தாக்கை நோக்கி சென்றது. அதிர்ஷ்டவசமாக, இந்திய ராணுவம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் காவல்துறையின் உடனடி நடவடிக்கையால், பேருந்து சாலையில் இருந்து பள்ளத்தாக்கில் சிக்காமல் தடுக்கப்பட்டது. பிரேக் செயலிழந்ததால் பேருந்தை கட்டுப்படுத்த முடியாமல் நாச்லானா, பனிஹால் அருகே வாகனத்தை நிறுத்த டிரைவர் சிரமப்பட்டதாக அங்கிருந்த அதிகாரிகள் தகவலை தெரிவித்தனர்.
இச்சம்பவத்தில் 6 ஆண்கள், 3 பெண்கள், ஒரு குழந்தை உட்பட 10 பேர் காயமடைந்துள்ளனர். இராணுவத்தின் விரைவு எதிர்வினைக் குழுக்கள் ஆம்புலன்ஸ்களுடன் சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்த அனைவருக்கும் மருத்துவ உதவி மற்றும் முதலுதவி அளித்தனர். இது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.