கோடை காலம் நெருங்கி வரும் நிலையில், மக்களுக்கு குடிநீர் வினியோகம் மற்றும் வடிகால் வாரியம் முக்கிய அறிவுரைகள் மற்றும் எச்சரிக்கையை வழங்கியுள்ளது.
பெங்களூரு நகரில் தினசரி மக்கள் தொகையானது அதிகரித்து வருகிறது. பல முன்னணி ஐடி நிறுவனங்கள் இங்கு தான் செயல்பட்டு வருகிறது. இதனால் கர்நாடகாவின் பிற மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் மட்டுமின்றி தமிழ்நாடு, கேரளா உள்பட ஏராளமானோர் பெங்களூருக்கு வேலை நிமித்தமாக செல்வோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இப்படி ஆண்டுதோறும் அதிகரிக்கும் மக்கள் தொகையால் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் கிடைப்பதில் சிக்கல் நிலவி வருகிறது. இதனால் காவிரியாற்றில் இருந்து பெங்களூருக்கு குடிநீர் வழங்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது கோடை காலம் நெருங்கி வரும் நிலையில், குடிநீர் தேவை என்பது அதிகரிக்கும். இந்நிலையில் தான், பொதுமக்கள் குடிநீரை பயன்படுத்துவது தொடர்பாக பெங்களூர் குடிநீர் வினியோகம் மற்றும் வடிகால் வாரியம் முக்கிய எச்சரிக்கையுடன் அறிவுரைகளை வழங்கியுள்ளது.
➥ பெங்களூருவில் குடிநீரை பிற பயன்பாட்டுக்கு பயன்படுத்தக் கூடாது.
➥ குடிநீரை வாகனம் கழுவவும், தோட்டம் மற்றும் கட்டுமானப் பணிகளுக்கும் பயன்படுத்த கூடாது. மீறினால், ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும்.
➥ மீண்டும் மீண்டும் தவறு செய்தால் கூடுதல் அபராதம் விதிக்கப்படும். கூடுதல் அபராதமாக தினமும் ரூ.500 அபராதம் விதிக்கப்படும்.
➥ இந்த கட்டுப்பாடுகளை யாரேனும் மீறினால், அதுபற்றி பொதுமக்களே பெங்களூரு குடிநீர் வினியோகம் மற்றும் வடிகால் வாரியத்துக்கு தெரியப்படுத்தலாம்.
➥ பொதுமக்கள் 1916 என்ற ‘டோல் ப்ரீ’ எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.