கோடை காலம் துவங்கியுள்ள நிலையில், இனி வரும் நாட்களில் நாம் அனைவரும் வெப்ப அலைக்கு ஏற்றவாறு உடலளவில் தயாராக இருக்க வேண்டும். நமது உடலை எப்போதும் ஹைட்ரேட்டாக வைத்துக் கொள்ள வேண்டும். உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்குமாறு அடிக்கடி பார்த்து கொள்ள வேண்டும். அதேசமயம், வெயில் கடுமையாக இருக்கும்போது, வெளியில் செல்லாமல் நிழல் அல்லது ஏசி அறைகளில் இருப்பது நல்லது.
மேலும், நல்ல காற்றோட்டமான ஆடைகளை அணிய வேண்டும். அடுத்து வரவிருக்கும் நாட்களில் கோடையின் தாக்கம் இன்னும் பல மடங்கு அதிகம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதனால், நம் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க வேண்டும். இந்நிலையில் தான், கோடை காலம் துவங்கியுள்ள நிலையில், சுகாதாரத்துறை முக்கிய வழிகாடு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
உணவு பாதுகாப்புத்துறைக்கு உத்தரவு
அதன்படி, ஜூஸ், குளிர்பான கடைகள், குளிர்பான மொத்த விற்பனை நிலையங்களில் ஆய்வு மேற்கொள்ள உணவு பாதுகாப்புத்துறைக்கு சுகாதாரத்துறை செயலாளர் செந்தில் உத்தரவிட்டுள்ளார். ஜூஸ் தயாரிக்க பயன்படுத்தும் மூலப்பொருட்கள் தரமானதாகவும், காலவதி தேதியுடன் உள்ளதா எனவும் ஆய்வு மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. குடிநீர் பாட்டில்கள், கேன்கள், தரச்சான்று, உணவு பாதுகாப்பு உரிமம் பெற்று தயாரிப்பு, முடிவு தேதி அச்சிடப்பட்டுள்ளதாக என்பதை சரிபார்க்கவும் ஆணையிடப்பட்டுள்ளது.
அதேபோல் அழுகிய பழங்களையோ, செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட பழங்களில் ஜூஸ் தயாரிக்கக் கூடாது. மீறினால், உரிமையாளருக்கு அபராதம் விதித்து உணவு பாதுகாப்புத்துறை உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.