கொடைக்கானலில் கோடை சீசன் களைகட்ட தொடங்கிய நிலையில், வார விடுமுறை நாளான இன்று ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்துள்ளனர்.
மலைகளின் இளவரசியான கொடைக்கானல் மலைப்பகுதியில் தற்போது குளுகுளு சீசன் களைகட்ட தொடங்கி உள்ளது. இங்கு தமிழகம் மட்டுமின்றி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர். இதற்கிடையே, வார விடுமுறை தினத்தை தொடர்ந்து இன்று அதிகாலை முதலே சுற்றுலாப் பயணிகள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்களில் குவிந்துனர். இதனால் புலிச்சோலை, வெள்ளிநீர்வீழ்ச்சி, உகார்த்தேநகர், கல்லறை மேடு, சீனிவாசபுரம், மூஞ்சிக்கல், ஏரிச்சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் சுற்றுலாப்பயணிகள் வாகனங்கள் மலைச்சாலையில் அணிவகுத்து நின்றன.
மேலும், கூடுதல் போக்குவரத்து காவலர்கள் நியமிக்கப்பட்டதின் காரணமாகவும் சுற்றுலா இடங்களுக்கு செல்லும் சாலை ஒருவழி சாலையாக மாற்றப்பட்டதின் காரணமாகவும் போக்குவரத்து நெரிசல் சற்று குறைந்து காணப்பட்டது. இதனைத் தொடர்ந்து சுற்றுலாப் பயணிகள் மோயர்சதுக்கம், தூண்பாறை, பைன்மரக்காடுகள், குணாகுகை, அப்பர்லேக்வியூ, பசுமை பள்ளத்தாக்கு உள்ளிட்ட சுற்றுலா தலங்களின் இயற்கை அழகினை கண்டு ரசித்தனர். வெள்ளி நீர்வீழ்ச்சி, வட்டக்கானல் அருவி, பாம்பார் அருவிகளில் சீராக கொட்டி வருன் நீரின் முன்பாக நின்று புகைப்படம் மற்றும் செல்பி எடுத்தும், நட்சத்திர ஏரியில் படகுசவாரியில் உற்சாகமாக ஈடுபட்டும், பிரையன்ட் பூங்காவில் புதிதாக பூத்துள்ள ஆயிரக்கணக்கான மலர்களையும் கண்டு ரசித்தும் ஏரியினை சுற்றி சைக்கிள்சவாரி, குதிரைசவாரி, நடைப்பயிற்சி போன்றவற்றிலும் உற்சாகமாக ஈடுபட்டனர். சுற்றுலாப்பயணிகள் தொடர் வருகை காரணமாக தங்கும் விடுதிகள் அனைத்தும் நிரம்பி வழிந்தன. இதனால் சுற்றுலா தொழிலை நம்பியுள்ள பல்வேறு தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.