தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து குடும்ப நல நீதிமன்றங்களுக்கும் மே 1 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் குடும்ப நல வழக்குகளை விசாரிப்பதற்காக 8 நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன. இந்நிலையில் தான், உயர்நீதிமன்ற பெண் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் குடும்ப நல நீதிமன்றங்களுக்கு கோடை விடுமுறை வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த கோரிக்கையை பரிசீலித்த உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் அல்லி, மே 1ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து குடும்ப நல நீதிமன்றங்களுக்கும் விடுமுறை அறிவித்துள்ளார். அதேபோல், குடும்ப நல நீதிமன்ற அலுவலங்கள் வழக்கம்போல் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளுக்கு கோடை விடுமுறை
தமிழகத்தில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் ஏற்கனவே முடிந்து கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. 1 வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு ஆண்டு இறுதித் தேர்வு ஏப்ரல் 17 நிறைவடைந்தது. மேலும், 6 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இறுதித் தேர்வு இன்றுடன் முடிவடைகிறது. இதையடுத்து, ஏப்ரல் 25 ஆம் தேதி முதல் மாணவ, மாணவிகளுக்கு கோடை விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2ஆம் தேதி மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.