அங்கன்வாடி பணியாளர்களுக்கு மே 10ஆம் தேதி முதல் 15 நாட்கள் கோடை விடுமுறை அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
கோடை விடுமுறை காலத்தில் ஒவ்வொரு வாரமும் சுழற்சி முறையில் அங்கன்வாடி பணியாளர்களுக்கு விடுமுறை அளிக்கும் நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வந்தது. இந்த நடைமுறையை மாற்றி தற்போது சமூக நலத்துறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில், மே மாதம் தொடங்கியது முதல் 50 சதவீத குழந்தைகள் மட்டுமே அங்கன்வாடிக்கு வருகை தருவதாக குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் இயக்குநர் தெரிவித்ததாக சுட்டிக்கப்பட்டப்பட்டுள்ளது. மேலும், கோடை வெப்பத்தின் காரணமாக அங்கன்வாடிகளுக்கு வரும் 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுவதாகவும், இந்த 15 நாட்களும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், 15 நாட்களுக்கு குழந்தைகளுக்குத் தேவையான ஊட்டச்சத்து உணவுகளை வீடுகளுக்கே சென்று வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாள்தோறும், 50 கிராம் வீதம் 750 கிராம் சத்துமாவை மொத்தமாக வழங்க வேண்டும் என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.