சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட விண்வெளி வீரர்கள் பூமிக்கு திரும்பியுள்ள நிலையில், அவர்களுக்கு பல்வேறு உடல்நலக் குறைவுகள் ஏற்படும் எனக் கருதப்படுகிறது.
இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அமெரிக்க விண்வெளி வீரர் பேரி வில்மோர் பூமியை அடைந்தனர். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் மூலம் அவர்கள் பூமி கோளுக்கு வந்தனர். சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து டிராகன் விண்கலம் அன்-டாக் ஆகி பிரிந்துள்ளது. அதிகாலை புளோரிடா கடலில் டிராகன் ஸ்பிளாஷ் தரையிறங்கியது. அவர்களுடன் அமெரிக்கா மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த விண்வெளி வீரர்கள் இருவர் டிராகன் விண்கலம் மூலம் பூமி திரும்பினர். இந்திய நேரப்படி அதிகாலை 3 மணியளவில் அவர்கள் பூமியை அடைந்தனர்.
அமெரிக்காவின் போயிங் நிறுவனம், அந்த நாட்டின் விண்வெளி அமைப்பான நாசா உடன் இணைந்து போயிங் ஸ்டார்லைனர் என்ற விண்கலத்தை உருவாக்கியது. இந்த புதிய விண்கலத்தில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் ஆகியோர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 5-ம் தேதி சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்றனர். 10 நாட்கள் ஆய்வு செய்துவிட்டு பூமிக்கு திரும்ப திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் ஸ்டார்லைனர் விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு இருவரும் பூமிக்கு திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டது. கடந்த ஆண்டு செப்டம்பர் 28-ம் தேதி ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் சர்வதேச விண்வெளி மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில், அமெரிக்காவை சேர்ந்த நிக் ஹேக், சுனிதா வில்லியம்ஸ், பேரி வில்மோர் மற்றும் ரஷ்யாவை சேர்ந்த அலெக்சாண்டர் ஆகியோர் டிராகன் விண்கலத்தில் நேற்று காலை 10.35 மணிக்கு பூமிக்கு புறப்பட்டனர். 17 மணி நேர பயணத்துக்குப் பிறகு இன்று அதிகாலை 3.27 மணியளவில் ஃபுளோரிடா கடல் பகுதியில் டிராகன் விண்கலம் வந்து சேர்ந்தது.
இந்நிலையில், சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் விண்வெளியில் 9 மாதங்கள் 13 நாட்கள் தங்கியிருந்தனர். அவர்கள் உட்பட 4 வீரர்களுக்கும் பல்வேறு உடல்நலக் குறைவுகள் ஏற்படும் என்று கூறப்படுகிறது. விண்வெளியில் தங்கியிருந்ததால் குறிப்பாக எலும்புகள், தசைநார்கள் பலவீனம் அடைந்திருக்கும். அவர்களால் எழுந்து நடக்க முடியாது. அவர்களின் தோல், குழந்தைகளின் தோல் போன்று மிகவும் மென்மையாக இருக்கும். பார்வை குறைபாடு ஏற்படும். கடுமையான தலைவலி, தலைசுற்றல், வாந்தி இருக்கும்.
சுமார் 6 மாதங்கள் முதல் ஓராண்டுக்கு பிறகே சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்டோர் இயல்பு நிலைக்கு திரும்புவார்கள். பூமிக்குத் திரும்பிய 4 பேரும் மறுவாழ்வு மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அங்கு 6 வாரங்கள் தீவிர பயிற்சி அளிக்கப்படும். குறிப்பாக, தரையில் கால் ஊன்றி நடக்க பயிற்சிகள் வழங்கப்படும். ஊட்டச்சத்துள்ள உணவு வகைகள் வழங்கப்படும். பின்னர், இயல்பு நிலைக்குத் திரும்பியதும் வீடுகளுக்கு செல்வார்கள்.
Read More : Watch Video | சுனிதா வில்லியம்ஸை வரவேற்ற டால்பின்கள்..!! டிராகனை சுற்றி சுற்றி வரும் கியூட் வீடியோ..!!