பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சொந்தமான ஆட்டோ வாங்குவதற்கு ஒரு லட்சம் மானியம் வழங்கும் திட்டத்திற்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
சென்னை தேனாம்பேட்டையில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், சுற்றுலா சார்ந்த தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் “சுற்றுலா மற்றும் சுற்றுலா சார்ந்த தொழில்”, உடலுழைப்புத் தொழிலாளர்கள் சட்டத்தின் அட்டவணையில் சேர்த்திட ஒப்புதல் வழங்கப்பட்டது. தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு வீடு கட்டுவதற்காக நிதி உதவி, திறன் மேம்பாட்டுப் பயிற்சி, கட்டுமானத் தொழிலாளர்களுக்கான பணியிட பாதுகாப்பு பயிற்சி போன்ற திட்டங்களுக்கான ஒப்புதல்கள் வழங்கப்பட்டது.

தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுது பார்க்கும் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களின் ஐ.டி.ஐ மற்றும் பாலிடெக்னிக் கல்வி பயிலும் குழந்தைகளுக்கு கல்வி நலத்திட்ட உதவித்தொகை ரூ. 1,000-இல் இருந்து ரூ.3,000-ஆக உயர்த்தி வழங்குவதற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதேபோல், சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டவாறு, வாரியத்தில் பதிவு பெற்ற 500 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சொந்தமாக ஆட்டோ வாங்குவதற்கு ஒரு லட்சம் மானியம் வழங்கும் திட்டத்திற்கும், அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியங்களுக்கு சொந்த கட்டிடம் கட்டுவதற்கும் ஒப்புதல் வழங்கப்பட்டது.