பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு மதிய உணவு மட்டுமின்றி காலையிலும் உணவு வழங்கி பள்ளியில் பாடம் கற்பிக்கும் விதமாக தமிழ்நாடு அரசு காலை சிற்றுண்டி திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்தது. இந்த திட்டம் நாடு முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் சென்னை, சைதாப்பேட்டையில் உள்ள திறந்தநிலை பல்கலைக்கழக வளாகத்தில் பள்ளிக்கல்வித் துறையின் நேரடி நியமன வட்டாரக் கல்வி அலுவலர்களின் கூட்டம் நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கும் காலை உணவு திட்டத்தை விரிவுப்படுத்துவது தொடர்பாக பரிசீலிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். 1 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் இலவச காலை உணவு வழங்கும் திட்டத்தை கொண்டு வந்தாலும் வரலாம். வரும் பட்ஜெட் கூட்டத்தில் இது குறித்து சாதகமான அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது” என்றார்.