தமிழக போக்குவரத்துத் துறையில் முக்கிய உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.. இந்த அறிவிப்பானது மாற்றுத்திறனாளிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் தமிழ்நாடு அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளிலும் இட ஒதுக்கீடுகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதைத்தவிர, மாற்றுத்திறனாளிகளுக்கு மாதந்தோறும் உதவித்தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழக முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு பேருந்து கட்டணத்தில் 75 சதவீதம் சலுகை அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பார்வை மாற்றுத்திறனாளிகள் தங்கள் ஏறும் இடத்தில் இருந்து 100 கிலோமீட்டர் தூரத்திற்கு கட்டணமில்லாமல் பயணிக்கலாம். அதற்கு மேல் உள்ள தூரங்களுக்கு 75% கட்டண சலுகை அளிக்கப்பட்டுள்ளது. மீதி 25% கட்டணம் மட்டும் செலுத்தினால் போதும். இதைத்தவிர, மாற்றுத்திறனாளிகள் ஏறி பயணிக்க ஏதுவாக புதிய பேருந்துகள் வாங்கும் நடவடிக்கைகள் மேற்கொண்டு மேற்கொள்ளப்பட்டு வருவதாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தொடர்ந்து கூறி வருகிறார்.
இப்படிப்பட்ட சூழலில், இன்னொரு அதிரடி அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, பழைய பயண அட்டையை காண்பித்து பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணிக்க மாற்றுத் திறனாளிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ் கிளை மேலாளர்கள் உள்ளிட்டோருக்கு சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறார் அதில் உள்ளதாவது, “மாற்றுத் திறனாளிகள், சுதந்திரபோராட்ட வீரர்கள், தமிழறிஞர்கள் மற்றும் அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் உள்ளிட்டோருக்கு அரசுப் பேருந்துகளில் பயணிப்பதற்கான கட்டணமில்லா பயண அட்டையை இணையதளம் வாயிலாக வழங்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
முதற்கட்டமாக மாநகர பேருந்துகளில் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டு, இதற்கான வசதியை கடந்த ஆண்டு செப்.7ஆம் தேதி போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார். இந்நிலையில், 2024-25ஆம் ஆண்டுக்கான பயண அட்டையை இணையதளம் வாயிலாக மாற்றுத் திறனாளிகள் பெறும் வரை, கடந்த மாதம் (மார்ச்) 31ஆம் தேதி வரை செல்லத்தக்க பயண அட்டை வைத்திருப்பவர்களை ஜூன் 30-ம் தேதி வரை பயணம் செய்ய அனுமதிக்க அறிவுறுத்தப்படுகிறது. அதேபோல், இணையதளம் வாயிலாக பெறப்பட்ட பயண அட்டை வைத்திருப்பவர்களையும் பேருந்துகளில் பயணிக்க அனுமதிக்க வேண்டும். இந்த அறிவுறுத்தல்களைப் பின்பற்றி, அனைத்து நடத்துநர்களும் மாற்றுத்திறனாளிகளிடம் கனிவுடன் நடந்து கொள்வதோடு, எவ்வித புகாரும் வராத வண்ணம் பணிபுரிய வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.