நாட்டில் விவசாயிகளின் நலனுக்காக மத்திய அரசு பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா என்ற திட்டத்தை தொடங்கியுள்ளது. இந்தத் திட்டத்தின்படி விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த பணம் மொத்தமாக வழங்கப்படாமல், 3 தவணைகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு தவணைக்கும் ரூ.2 ஆயிரம் வீதம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின்படி முதல் தவணை ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ஜூலை 31ஆஆம் தேதி வரை வழங்கப்படும். இரண்டாம் தவணை ஆகஸ்ட் 1 முதல் நவம்பர் 30 வரையிலும், 3-வது தவணை டிசம்பர் 1 முதல் மார்ச் 31 வரையிலும் வழங்கப்படும்.

இந்நிலையில் 2023-24ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. இந்த பட்ஜெட் மீது அதிக எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில், தற்போது ஒரு முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, விவசாயிகளுக்கு தற்போது பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் வருடத்திற்கு ரூ.6,000 வழங்கப்பட்டு வரும் நிலையில், இனி ரூ.8,000 வழங்கப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. மேலும், பிப்ரவரி மாதம் நடைபெறும் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது இதுதொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.