தமிழ்நாட்டில் உள்ள பெண் சுய உதவிக்குழுக்களுக்கு நல்ல செய்தி ஒன்றை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் பெண்களுக்கு முன்னேற்றம் கொடுக்க வேண்டும் என்று பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படியே, தமிழ்நாட்டில் கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் இந்த திட்டம் அமலுக்கு வந்துள்ளது. இதன் மூலம் அரசுப் பள்ளிகளில் படிக்கும் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். அவர்கள் இளங்கலை படிப்பு படித்து முடிக்கும் வரை இந்த தொகை வழங்கப்படும். நேரடியாக அவர்களின் வங்கி கணக்குகளில் இதற்கான தொகை செலுத்தப்படும். ‘புதுமைப்பெண் திட்டம்’ என்று இந்த திட்டத்துக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இதேபோல் குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் கொடுக்கும் திட்டமும் நடைமுறையில் வர உள்ளது. பெண்களுக்கு மாதம் ரூ1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் செப்டம்பர் 15ஆம் தேதி அண்ணா பிறந்தநாள் முதல் வழங்கப்படும் என முதலமைச்சர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பல்வேறு காரணங்களால் இந்த திட்டம் இன்னும் நடைமுறைக்கு வராமல் இருந்தது. கடந்த பட்ஜெட்டில் இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வரவில்லை. பொருளாதார ரீதியாக அரசுக்கு இருக்கும் சில சிக்கலால் இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வராமல் இருந்தது. திமுகவின் இந்த தேர்தல் வாக்குறுதி பல்வேறு காரணங்களுக்காக இன்னும் நடைமுறைக்கு வரவில்லை.
இந்த உரிமைத் தொகை ஏழ்மையான குடும்பத் தலைவிகளுக்கு மட்டுமே அளிக்கப்படும் என்றும் மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்தான் குடும்ப தலைவிகளுக்கு ரூபாய் 1000 கொடுக்கும் திட்டம் வரும் செப்டம்பர் மாதம் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான லிஸ்ட் எடுக்கும் பணிகள் தற்போது நடந்து வருகிறது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம், தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகளுக்கு மட்டும் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க தமிழ்நாடு அரசு சுய உதவி குழுக்களை வைத்து பெண்களுக்கு இன்னொரு முக்கியமான நல்ல செய்தியை அளிக்க உள்ளது. ஒரே கிராமத்தை சேர்ந்த, ஒருமித்த கருத்துடைய 18 முதல் 60 வயது வரை உள்ள பெண்கள், 12 முதல் 20 வரை என்ற எண்ணிக்கையில் ஒன்றிணைந்து தங்களின் முன்னேற்றத்திற்காகவும், சமூக வளர்ச்சிக்காகவும் ஒரே குழுவாக சேர்ந்து செயல்படுதலே “சுய உதவிக் குழு” எனப்படும். கூட்டுறவு வங்கிகளில் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்படும் கடன் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. 12 லட்சம் ரூபாயில் இருந்து, 20 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்படும் என்று சமீபத்தில்தான் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், குழுக்கள் மூலம் உருவாக்கப்படும் பொருட்களை மாநிலம் முழுக்க சந்தைப்படுத்தி விற்பனை செய்ய தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. நேற்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மூலம் திருச்சியில் உற்பத்தியாளர் சந்தையாளர் ஒருங்கிணைப்பு திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. முதல்முறையாக தமிழ்நாட்டில் மாநிலம் முழுக்க இதேபோல் பெண்கள் குழுக்கள் பயன் அடையும் வகையில், உற்பத்தியாளர் சந்தையாளர் ஒருங்கிணைப்பு திட்டம் தொடங்கப்பட உள்ளது. இதன் மூலம் சுய உதவிக்குழுக்கள் தயாரிக்கும் பொருட்கள் சந்தைப்படுத்தப்படும். பெண்கள் குழுக்கள் மூலம் கடன் வாங்கியது போக, வருவாய் ஈட்ட முக்கிய வழிவகுக்கும். இதேபோல் மூன்றாம் பாலினத்தவருக்கு தனியாக சுயஉதவிக் குழுக்கள் தொடங்க அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை செய்து கொண்டிருக்கிறார்.