நீண்ட நாட்களாக செலுத்தாமல் உள்ள மின்சார நிலுவை கட்டணத்தை வசூல் செய்ய ஒருமுறை தீர்வு என்ற புதிய திட்டத்தை உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிமுகப்படுத்தியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் இதற்கு முன்னர் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் முதலமைச்சராக நீடித்தது கிடையாது. ஆனால் இந்த சாதனையை கடந்த சட்டமன்ற தேர்தலில் யோகி ஆதித்யநாத் முறியடித்துள்ளார். மக்களின் இந்த ஆதரவை நாடாளுமன்ற தேர்தலுக்கும் நீடிக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான புதிய திட்டங்களை அவர் தொடர்ந்து அறிவித்து வருகிறார். இந்நிலையில் உ.பியில் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள மின் கட்டணங்களை வசூலிக்க புதிய யோசனையை முன்வைத்திருக்கிறார்.
அதன்படி, மின்சார கடன் செலுத்தாத பொதுமக்கள் மட்டுமல்லாது வணிக நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், தொழில்துறை நுகர்வோர் என அனைத்து தரப்பினருக்கும் சலுகை ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இன்று(நவ.8) முதல் ஆண்டு இறுதி வரை மின்சார நுகர்வோருக்கான ஒரு முறை தீர்வுத் திட்டம் செயல்படுத்தப்படும். இந்த திட்டத்தை பயன்படுத்தி மின்சார கடன் வைத்திருப்பவர்கள் எளிய தவணை முறையில் அதனை கட்டலாம். அதிகபட்சமாக 12 தவணைகள் வரை நீட்டிக்கப்படும். அதேபோல கூடுதல் கட்டணங்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும்.
தற்போது ஒரு விவசாயி/தொழில் நுகர்வோர்/தனியார் நிறுவனம் இவர்கள் ஒரு கிலோ வாட் வரை கடன் நிலுவையில் வைத்திருந்தால் அவர்கள் இதற்கு மட்டும் பணம் கட்டினால் போதுமானது. ஆனால் டிசம்பர் மாதம் 15ம் தேதிக்குள் கட்ட வேண்டும். இந்த தேதியை தாண்டி கட்டுபவர்களுக்கு கூடுதல் கட்டணங்களிலிருந்து 90 சதவிகிதம் விலக்கு அளிக்கப்படும். இதே 12 தவணையாக கடனை கட்டுபவர்களுக்கு கூடுதல் கட்டணத்திலிருந்து 70 சதவிகிதம் விலக்கு அளிக்கப்படும். இது குறித்து எரிசக்தி துறை அமைச்சர் ஏ.கே. ஷர்மா கூறுகையில், இது உத்தரப் பிரதேச மக்களின் மின்சார கடன் சுமையை நிச்சயம் போக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.