விவசாயிகளுக்கு இணையத்தின் மூலம் உடனடியாக கடன் வழங்கும் திட்டத்தை ஃபெடரல் வங்கி தொடங்கியுள்ளது.
சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் ரிசர்வ் வங்கியின் புதுமை
உருவாக்கல் மையம் உருவாக்கிய உடனடி கிசான் கிரெடிட் கார்டு திட்டத்தை அதாவது விவசாயிகளுக்கு உடனடியாக கடன் வழங்கும் திட்டத்தை ஃபெடரல் வங்கி தொடங்கி வைக்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பெடரல் வங்கியின் தலைவர் ஷியாம் சீனிவாசன், விஜேந்திர பாண்டியன் ஐஏஎஸ் உள்ளிட்டோர் பங்கேற்று திட்டத்தை தொடங்கி வைத்தனர்.

இந்த திட்டத்தின் மூலம் தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு நேரடியாக ஆதார் அட்டை உள்ளிட்ட சில ஆவணங்களை வைத்து இணையத்தின் மூலம் உடனடியாக கடன் வழங்கப்படும். கடன் வழங்கலில் தற்போது இருந்து வரும் பாரம்பரியமான வழிமுறையோடு ஒப்பிடுகையில் விவசாயிகளுக்கு இது ஒரு புதிய அணுகுமுறையாக இருக்கும். எளிதில் கடன் பெறக்கூடிய வகையில் தொடக்கத்தில் இருந்து முடிவு வரை விரிவான டிஜிட்டல் மற்றும் தாள் பயன்பாடு இல்லாத நிலையில், இச்செயல் தளம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய பெடரல் வங்கியின் தலைவர் ஷாம்
சீனிவாசன், ”விவசாயிகளுக்கு நன்மை தரக்கூடிய ஒரு திட்டமாக இந்த திட்டத்தை இன்று தொடங்கி இருக்கிறோம். விவசாயிகள் அவர்களுக்குத் தேவையான கடனை அவர்களிடம் இருக்கும் ஆதார் எண் மற்றும் சிட்டா அடங்களை வைத்து உடனடியாக 5 நிமிடத்தில் கடனை பெற்றுக் கொள்ளலாம். மேலும் 4 சதவீத வட்டியில் கடன் கொடுக்கப்படும்” என்றார்.