தமிழ்நாடு அரசின் 2023-24ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நாளை தாக்கல் செய்யவுள்ளார். இந்த பட்ஜெட்டில் பெரும்பாலானோரின் எதிர்பார்ப்பு, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமை தொகையாக வழங்கும் திட்டம்தான். திமுக தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான இந்த திட்டத்திற்கு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்தது. ஆனால், திமுக ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகளுக்கும் மேலான நிலையில், அதற்கான அறிவிப்பு வரவில்லை. இதனால், அரசியல் தலைவர்கள் விமர்சனங்கள் செய்து வந்தனர்.
இதற்கிடையே, ஈரோடு இடைத்தேர்தலின்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கத் தொடங்குவதற்கான தேதி வரும் பட்ஜெட் தாக்கலில் அறிவிக்கப்படும்” என்று தெரிவித்தார். இந்நிலையில், நாளை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இத்திட்டத்திற்கான தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த பட்ஜெட்டில் துறை சார்ந்த சில முக்கிய அறிவிப்புகளும் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. மேலும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பினருக்கான முக்கிய அறிவிப்புகளையும் பட்ஜெட்டில் அரசு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.