இந்தியாவில் தடை செய்யப்பட்ட இஸ்லாமிய இயக்கங்களுக்கு சமூக வலைத்தளத்தில் ஆதரவு அளித்து வந்ததாக கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நீலிக்கொல்லி பள்ளிவாசல் தெருப் பகுதியை சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர் அனாஸ் அலி. இவர், இன்று அதிகாலை மத்திய உளவுத்துறை மற்றும் சிறப்பு புலனாய்வு துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டார். வேலூர் மாவட்டம் அணைக்கட்டில் உள்ள காவல் நிலையத்திற்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டு, தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

தற்போது வரையிலான விசாரணையில் இந்தியாவில் தடை செய்யப்பட்ட பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த இஸ்லாமிய இயக்கங்கள், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளத்தில் பதிவிடும் பதிவுகளை தொடர்ந்து (Like) விரும்பியும், மற்றவர்களுக்கு (Share) பகிர்ந்தும் வருவதோடு, அதை தொடர்ந்து ஆதரித்து வந்துள்ளார். அதனடிப்படையில், இவரது சமூக வலைதளப்பக்கங்கள் கண்காணிக்கப்பட்டு, மாணவனை பிடித்து விசாரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், மாணவனிடம் பறிமுதல் செய்யப்பட்ட 2 செல்போன்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது