சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். ஓராண்டுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர், ஜாமீன் கேட்டு பலமுறை மனு தாக்கல் செய்துள்ளார். ஆனால், அவரது மனு தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 26 ஆம் தேதி அவருக்கு நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
ஜாமீனில் வெளியே வந்த சில நாட்களிலேயே அவர் அமைச்சராக மீண்டும் பதவியேற்றுக் கொண்டார். எனவே, அவரது ஜாமீனை ரத்து செய்ய வலியுறுத்தி வழக்கு தொடரப்பட்டது. செந்தில் பாலாஜி அமைச்சராகி விட்டதால் அவருக்கு எதிரான வழக்கில் தைரியமாக சாட்சி சொல்வதற்கு சாட்சிகள் தயங்குகிறார்கள். எனவே, செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என வித்யாகுமார் என்பவர் மனு தாக்கல் செய்தார்.
இதற்கிடையே, வழக்கில் எந்த சாட்சியையும் அச்சுறுத்தவில்லை. மனுதாரர் கூறும் குற்றச்சாட்டுகள் உண்மைக்கு உகந்ததல்ல என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். உச்சநீதிமன்ற உத்தரவின் படி, ஜாமீன் நிபந்தனைகளையும் மீறவில்லை என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்தனர்.
செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கியது குறித்து விளக்கம் அளித்த நீதிபதிகள், ”செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கொடுத்த போது இருந்த சூழல் வேறு; தற்போதைய சூழல் வேறு. ஜாமீன் கொடுக்கும்போது நீங்கள் அமைச்சர் பதவியில் இல்லை. சிறையில் இருந்த செந்தில் பாலாஜிக்கு நன்னடத்தை அடிப்படையில் ஜாமீன் வழங்கவில்லை. அடிப்படை உரிமை பாதிக்கப்பட கூடாது என்பதற்காகவே வழங்கினோம். செந்தில் பாலாஜி அமைச்சராக இல்லை என சிறப்பு மனு தாக்கல் செய்து ஜாமீன் பெற்றுக் கொண்டீர்கள். ஆனால், பிறகு மீண்டும் அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டீர்கள்.
ஜாமீன் வழங்கியபோது அமைச்சராக பதவி ஏற்க அனுமதி வழங்கவில்லை. அமைச்சராக இருந்த போது செந்தில் பாலாஜி புகார் தாரர்களுடன் செட்டில்மென்ட் செய்து கொண்டது நினைவில்லையா? தற்போது அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜி சாட்சிகளை கலைக்க மாட்டார் என்பதற்கு என்ன உறுதி..? சாட்சியை செந்தில் பாலாஜி கலைக்க மாட்டார் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஜாமீன் கிடைத்ததும் அமைச்சராக பதவி ஏற்றது நேர்மையான செயல் அல்ல.
செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கியது நாங்கள் செய்த தவறு. இதுவே தவறான உதாரணமாகிவிட்டது. எனவே, ஜாமீன் வேண்டுமா..? அமைச்சர் பதவி வேண்டுமா..? என்பதை செந்தில் பாலாஜி முடிவு செய்து திங்கட் கிழமைக்குள் பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் தான், அமைச்சர் செந்தில் பாலாஜி, தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனது உடல்நிலை மற்றும் கட்சிக்கு ஏற்படும் கலங்கத்தை கருத்தில் கொண்டு அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய செந்தில் பாலாஜி முன்வந்துள்ளதாக தெரிகிறது. மேலும், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிடுமாறு திமுக தலைமையும் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
Read More : உங்களுக்கு திருமணம் ஆகிருச்சா..? பணத்தை இரட்டிப்பாக்க செம ஐடியா..!! இப்படி முதலீடு பண்ணி பாருங்க..!!