மத்திய அரசு “மத்திய புலனாய்வு அமைப்புகளை தவறாக பயன்படுத்துகிறது” என்று 14 எதிர்க்கட்சிகள் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் விசாரிக்க மறுத்துவிட்டது..
பாஜக தலைமையிலான மத்திய அரசு “மத்திய புலனாய்வு அமைப்புகளை தவறாக பயன்படுத்துகிறது” என்று காங்கிரஸ் உள்ளிட்ட 13 எதிர்க்கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன. எதிர்க்கட்சிகள் தாக்கல் செய்த மனுவில் “95 சதவீத வழக்குகள் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராக உள்ளன. கைதுக்கு முந்தைய வழிகாட்டுதல்கள் மற்றும் கைதுக்கு பிந்தைய வழிகாட்டுதல்களை நாங்கள் கேட்கிறோம்.. சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற மத்திய புலனாய்வு அமைப்புகளை எதிர்க்கட்சி தலைவர்களை கைது செய்வதற்காக மத்திய அரசு தவறாக பயன்படுத்துகிறது..
2014-க்குப் பிறகு, மத்தியில் நரேந்திர மோடி அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, எதிர்க்கட்சியினர் மீது அதிகமான எண்ணிக்கையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.. ஆனால் பாஜகவில் இணைந்தவுடன் அந்த தலைவர்கள் மீதான வழக்குகள் திரும்பப் பெறப்படுகின்றன..” என்று எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி உள்ளனர்.
காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, இடதுசாரிகள், தி.மு.க., ஜனதா தளம், பாரத் ராஷ்டிர சமிதி, ராஷ்டிரிய ஜனதா தளம், சமாஜ்வாடி, சிவசேனா (உத்தவ் தாக்கரே பிரிவு), தேசிய மாநாட்டு கட்சி, தேசியவாத கட்சி உள்ளிட்ட கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன. இந்த வழக்கு இன்று விசாரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது..
இந்நிலையில் இந்த மனு இன்று உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.. அப்போது இந்த மனுவை விசாரிக்க மறுத்த உச்சநீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.. அப்போது, தலைமை நீதிபதி சந்திரசூட், எதிர்க்கட்சித் தரப்பு வழக்கறிஞர் அபிஷேக் மனு சங்வியிடம், “விசாரணை, தண்டனைகளில் இருந்து எதிர்க்கட்சிகளுக்கு விலக்கு கேட்கிறீர்களா?. ஒருவேளை அரசியல்வாதிகளுக்கு சாமானியர்களைத் தாண்டி தனிச் சிறப்பான உரிமைகள் ஏதும் இருக்கிறது எனக் கருதுகிறீர்களா?” என்று கேட்டார்.
அப்போது குறுக்கிட்ட சங்வி, “எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு என்று எவ்வித பாதுகாப்பையும் கோரவில்லை. ஆனால் சட்டத்தை நியாயமாக, பாரபட்சமின்றி பயன்படுத்த வேண்டும் என்றுதான் கேட்கிறோம்… அரசாங்கம் மத்திய புலனாய்வு அமைப்புகளைப் பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் வலுவிழக்கச் செய்ய முயற்சிக்கிறது. இது ஜனநாயகத்திற்கும், சட்டத்திற்கும் எதிரானது என்பதே எங்களின் வாதம்” என்றார். இதை தொடர்ந்து நீதிபதி, “இந்த மனு பிரத்யேகமாக அரசியல்வாதிகளுக்காக உள்ளது. இதை நீதிமன்றம் மூலம் அணுகாமல் நாடாளுமன்றத்திலேயே தீர்த்துக் கொள்ளலாம்” என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்..