மாநில அரசு அனுப்பும் மசோதாக்களை கிடப்பில் போட ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது என உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தமிழக வெற்றிக் கழகம் வரவேற்பதாக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆளுநரால் நிறுத்தி வைக்கப்பட்ட 10 சட்ட மசோதாக்களுக்கு சுப்ரீம் கோர்ட் ஒப்புதல் அளித்துள்ளது. இது வரவேற்கத்தக்கது. சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பி வைக்கப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க வேண்டியது ஆளுநரின் கடமையாகும். ஆனால், நமது ஆளுநர் தன்னிச்சையாக முடிவெடுத்து, மசோதாக்களை கிடப்பில் போட்டார். இதன் மூலம் மக்களாட்சித் தத்துவத்தின் மகத்துவத்தைக் கேள்விக்குறியாக்கினார். ஆனால், உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், மாநில அரசு அனுப்பும் மசோதாக்களைக் கிடப்பில் போடும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை என்று சம்மட்டி அடி கொடுத்துள்ளது.
மேலும், ஆளுநரால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10 மசோதாக்களுக்கும் சுப்ரீம் கோர்டே ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை தமிழ்நாடு வெற்றிக் கழகம் மனதார வரவேற்கிறது. தமிழ்நாடு எப்போதும் மாநில உரிமைகளை காப்பதிலும், மாநிலத் தன்னாட்சிக் கொள்கையைப் பேணுவதில் முன்னோடி மாநிலமாக திகந்து வருவது உலகறிந்த ஒன்று. மாநிலத் தன்னாட்சிக்காகக் குரல் கொடுப்பதும், உரிமைகளை காப்பதும் தவெக-வின் நிலைப்பாடு. இதை நம் கழக வெற்றித் தலைவரின் அறிவுரையின் பெயரில் இத்தருணத்தில் தெரிவிக்கிறோம்” என கூறப்பட்டுள்ளது.