எனது அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. மீண்டும் களத்திற்கு திரும்புவதில் உறுதியாக இருக்கிறேன் என்று கே.எல்.ராகுல் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் வீரரும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாக கே. எல். ராகுல் உள்ளார். இந்தநிலையில், ஐபிஎல் தொடரின் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில், பீல்டிங் செய்யும்போது தொடையில் அவருக்கு காயம் ஏற்பட்டது. வலது தொடை பகுதியில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யவேண்டும் எனும் நிலை ஏற்பட்டதால் நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடரிலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இருந்தும் விலகினார்.
இதனையடுத்து, தற்போது வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்துள்ளதாகவும், தான் விரைவில் களத்திற்கு திரும்புவேன் என கே. எல். ராகுல் தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராமில் கூறியதாவது ” அனைவருக்கும் வணக்கம், நான் எனது அறுவை சிகிச்சையை முடித்துக் கொண்டேன். அது வெற்றிகரமாக முடிந்தது. தொடர்ந்து உதவி செய்த மருத்துவர்களுக்கும் மருத்துவ ஊழியர்களுக்கு ஒரு பெரிய நன்றி. மீண்டும் களத்திற்கு திரும்புவதில் உறுதியாக இருக்கிறேன்” என கூறியுள்ளார்.