சிறுமி தான் பொய் சொன்னதை ஒப்புக்கொண்டதால், சிறுமியின் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்திருந்த போலீசார், அந்த வழக்கை வாபஸ் பெற்றனர்.
இந்தச் சம்பவம் டெல்லியின் வடகிழக்கு பகுதியில் அரங்கேறியுள்ளது. இது தொடர்பாக பஜன்புரா காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக போலீசார் கூறுகின்றனர். பள்ளி முடிந்ததும், தன்னுடன் 3 சிறுவர்கள் தகராறில் ஈடுபட்டதாகவும், தன்னை சில மீட்டர் தூரம் இழுத்துச் சென்று கைகளில் காயம் ஏற்படுத்தியதாக சிறுமி குற்றம் சாட்டியுள்ளார். இந்த புகாரின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்யப்பட்டு போலீசார் விசாரணை நடத்தினர். “சிசிடிவி காட்சிகளைப் பார்வையிட்டபோது, குழந்தை தனியாக சுற்றித் திரிவதைக் கண்டோம். பின்னர் நாங்கள் குழந்தைக்கு அறிவுரை வழங்கினோம். பெண் காவலர்கள் சிறுமியிடம் பேசினார்கள். இறுதியாக, மார்ச் 15ஆம் தேதி அந்தச் சிறுமி உண்மையைச் கூறிவிட்டார்” என துணை போலீஸ் கமிஷனர் ஜாய் டிர்கி தெரிவித்துள்ளார்.
“அன்று சமூக அறிவியல் தேர்வு. சிறுமி தேர்வை சரியாக எழுதவில்லை. இதனால் பெற்றோர் திட்டுவார்கள் என்று பயம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் பள்ளிக்கு அருகில் உள்ள ஒரு கடைக்குச் சென்ற சிறுமி, தின்பண்டங்களுடன் பிளேடையும் சேர்த்து வாங்கி இருக்கிறார். பின் தன்னைத்தானே பிளேடால் காயப்படுத்தி இருக்கிறார்” எனவும் கமிஷனர் ஜாய் கூறுகிறார். சிறுமி உண்மையை வெளிப்படுத்திய பிறகு, நீதிபதியிடம் அழைத்துச் செல்லப்பட்டு அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. அப்போது சிறுமி, தன்னைத் துன்புறுத்தியதாக பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாக ஒப்புக்கொண்டார். அவரது இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்கு ரத்து செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.