Mohamed al-Bashir: சிரியாவில் இருந்து அதிபர் பஷர் அல்-ஆசாத் வெளியேறிய நிலையில், முகமது அல்-பஷிரை இடைக்கால பிரதமராக கிளர்ச்சியாளர்கள் நியமித்துள்ளனர்.
சிரியாவில் 54 ஆண்டு கால ஆசாத் குடும்பத்தின் கொடுங்கோல் ஆட்சிக்கு முடிவு கட்டப்பட்டுள்ளது. ஹயாத் தஹ்ரிர் அல் ஷாம் (எச்டிஎஸ்) எனும் கிளர்ச்சிப் படை, கடந்த நவம்பரில் இருந்து ஒவ்வொரு நகரங்களை பிடித்து இறுதியாக தலைநகர் டமாஸ்கசை நேற்று முன்தினம் கைப்பற்றியது. இதனால், 29 ஆண்டாக ஆட்சி செய்த அதிபர் பஷர் அல் ஆசாத் நாட்டை விட்டு தப்பி ஓடி தலைமறைவாகி உள்ளார். இதைத் தொடர்ந்து, பிரதமர் காஸி ஜலாலி ஆட்சி அதிகாரத்தை எச்டிஎஸ் படைத் தலைவர் அபு முகமது அல் கோலானியிடம் ஒப்படைத்துள்ளார். ஆசாத் ஆட்சிக்கு முடிவு கட்டப்பட்டுள்ளதாலும் சிரியா மக்கள் மகிழ்ச்சியில் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், சிரியாவில் புதிய ஆட்சி அமைப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. ஆட்சி அதிகார மாற்றம் சுமூகமாகவும் விரைவாகவும் நடக்க கேபினட் அமைச்சர்கள் தொடர்ந்து செயல்பட்டு வருவதாக பிரதமர் காஸி ஜலாலி கூறியுள்ளார். மேலும், நாட்டு மக்களுக்கு நேற்று உரையாற்றிய எச்டிஎஸ் படைத் தலைவர் அபு முகமது அல் கோலானி, ‘‘சிரியாவில் புதிய வரலாறு பிறந்துள்ளது. புதிய அரசு விரைவில் அமைந்ததும் உடனடியாக பணிகள் தொடங்கப்படும்’’ என்றார். இதைத் தொடர்ந்து, இடைக்கால அரசின் புதிய பிரதமராக முகமது அல் பஷீர் நியமிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. அதன்படி, பஷீர் மார்ச் 1 வரை பதவியில் இருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Readmore: வங்கதேச மீனவர்கள் 78 பேர் கைது!. எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இந்திய கடலோர காவல்படை அதிரடி!.