கோவை மாவட்டம் கோட்டைமேட்டை சேர்ந்த 37 வயது பெண் ஒருவர் பெற்றோருடன் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. வடவள்ளி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இந்த பெண்ணுக்கு, அவர் பணிபுரியும் பள்ளியில் உடன் பணியாற்றும் சரவணம்பட்டியை சேர்ந்த சக ஆசிரியை ஒருவர் மூலமாக சந்தோஷ்குமார் (42) என்ற தொழிலதிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. முதல் முறையாக சந்தித்த பிறகு செல்போன் எண்களை பகிர்ந்து கொண்டு பேசத் தொடங்கியுள்ளனர்.
அதன்பிறகு இருவரும் நேரில் சந்தித்து நெருங்கி பழகியுள்ளனர். இந்நிலையில் ஒரு கட்டத்தில், திருமணம் செய்து கொள்வதாக அப்பெண்ணிடம் சந்தோஷ்குமார் கூறியுள்ளார். இதற்கு அப்பெண்ணும் சம்மதம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, சந்தோஷ்குமார் அப்பெண்ணை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று உல்லாசமாக இருந்துள்ளார்.
மேலும், ஆசிரியையிடம் இருந்து பல்வேறு காலங்களில் பல்வேறு காரணங்களை கூறி ரூ.25 லட்சம் பணத்தை தொழிலதிபர் பெற்றுள்ளார். இந்நிலையில் தான் ஆசிரியை திருமணம் செய்துக் கொள்ளலாம் என கூறியுள்ளார். ஆனால், தொழிலதிபர் உல்லாசமாக இருந்து விட்டு, பணத்தையும் பெற்று மோசடி செய்து விட்டு திருமணத்துக்கு மறுத்துவிட்டார். தொடர்ந்து பேசியதால் மிரட்டல் விடுத்து உள்ளார். இதனால் ஆசிரியை போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில், சந்தோஷ்குமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.