தமிழ்நாட்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் பட்டியலை இறுதி செய்ய இன்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன், மாநில தலைவர் அண்ணாமலை, உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் டெல்லி செல்கின்றனர்.
2024 மக்களவைத் தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இந்த நிலையில் பாஜக சார்பில் கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும், கூட்டணியில் மேலும் கட்சிகளை இணைப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்காக, தமிழக பாஜக சார்பில் 7 பேர் கொண்ட குழுவை அமைத்து அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார்.
அந்தக் குழுவில், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாளர் அரவிந்த் மேனன், இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, பாஜக சட்டமன்றக் குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தேசிய செயற்குழு உறுப்பினர் பொன்.ராதாகிருஷ்ணன், தற்போதைய தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா, தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் பட்டியலை இறுதி செய்ய இன்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன், மாநில தலைவர் அண்ணாமலை, உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் டெல்லி செல்கின்றனர். தேசிய தலைமை விரைவில் வெளியிடும் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலில் தமிழ்நாட்டின் வேட்பாளர்கள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதற்கட்ட பட்டியல்
மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார் அக்கட்சிட்யின் பொதுச் செயலாளர் வினோத் தாவ்டே. வரும் மக்களவைத் தேர்தலில் ஒன்றிய அமைச்சர்கள் மற்றும் இணை அமைச்சர்கள் 34 பேர் மீண்டும் போட்டியிடுகின்றனர். 80 தொகுதிகளைக் கொண்ட உத்தரப் பிரதேச மாநிலத்தில் 51 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர்களை அறிவித்துள்ளது பாஜக. பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார்.