மார்ச் 14ஆம் தேதி காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவையில் தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்ற கூட்டம் இந்தாண்டு ஜனவரி 6ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஆனால், அன்றைய கூட்டத்தில் ஆளுநர், தனது உரையை புறக்கணித்துச் சென்றார். இதனைத் தொடர்ந்து, 11ஆம் தேதி வரை ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதமும், முதலமைச்சரின் பதிலுரையும் இடம்பெற்றது. பின்னர், சட்டப்பேரவை கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், மார்ச் 14ஆம் தேதி காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவையில் தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசுவார் என்றும் அவரது உரை சுமார் 1½ மணி நேரம் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தலுக்கு முன்பாக தாக்கல் செய்யப்படும் முழு பட்ஜெட் இதுவாகும்.
எனவே, இந்த பட்ஜெட்டில் மக்களை கவரும் வகையில் புதிய அறிவிப்புகள் பல இடம்பெற வாய்ப்புள்ளது. இதனைத் தொடர்ந்து, மார்ச் 15ஆம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. 2021ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த பிறகு வேளாண் துறைக்கு என்று தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இந்த வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்வார்.
Read More : வாகனங்களை மாடிஃபிகேஷன் செய்யப்போறீங்களா..? போலீசிடம் சிக்கினால் ஜெயில் தான்..!! தப்பிப்பது எப்படி..?