தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் விரைவில் மாற்றப்படலாம் என கூறப்படும் நிலையில், கே.எஸ்.அழகிரி டெல்லியில் முகாமிட்டுள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக கே.எஸ். அழகிரி 2019 ஆம் ஆண்டு பொறுப்பேற்றார். அவரது தலைமையின் கீழ் நாடாளுமன்ற தேர்தலில் 8 இடங்களிலும், சட்டமன்ற தேர்தலில் 18 இடங்களிலும் அக்கட்சி வெற்றி பெற்றது. அவர் நியமிக்கப்பட்டு 5 ஆண்டுகள் ஆகவுள்ள நிலையில், புதிய தலைவர் நியமிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
புதிய தலைவர் பதவிக்கு திருநாவுக்கரசர், செல்லக்குமார், ஜோதிமணி, விசுவநாதன், விஜயதரணி, சசிகாந்த் செந்தில் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில், கே.எஸ்.அழகிரி கட்சி மேலிடத்தை சந்திப்பதற்காக டெல்லியில் முகாமிட்டுள்ளார். அவரின் பதவி நீட்டிக்கப்படுமா? அல்லது புதிய தலைவர் நியமிக்கப்படுவாரா? என்ற எதிர்பார்ப்பு அக்கட்சி நிர்வாகிகள் மத்தியில் எழுந்துள்ளது.
விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கூட்டணிக் கட்சியான திமுகவுடன் இணக்கமாக செயல்படுபவரே புதிய தலைவராக நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாற்றப்படலாம் என செய்திகள் வெளியாகி வரும் நிலையில், அழகிரியின் பதவிக்காலத்தை நீட்டிக்கப்படலாம் என்றும் அக்கட்சி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.