தமிழகம் மற்றும் புதுச்சேரியில் எப்படி, தேர்தல் நடத்துவது என்பது குறித்து தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்திவரும் நிலையில், கடைசி கட்டத்தில் தேர்தலை நடத்தலாம் என்ற தனது யோசனையை அண்ணாமலை மேலிடத்தில் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளனர்.
மக்களவை தேர்தல் விரைவில் வரவுள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகளை தலைமை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. கடந்த எம்பி தேர்தலை நடத்தியதை போலவே, இந்த முறையும் நாடுமுழுவதும் மொத்தம் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடத்த திட்டமிடப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. வழக்கமாக, ஒவ்வொரு மாநிலத்திலும் பள்ளி தேர்வுகள், பண்டிகைகள் மற்றும் முக்கிய நிகழ்ச்சிகளை கணக்கிட்டு தேர்தல் ஆணையம் ஆய்வு செய்யும். இந்த ஆய்வின் அடிப்படையில்தான் தேர்தல் தேதி அட்டவணையும் தயாரிக்கப்படும்.
இதுதவிர வேறு ஏதேனும் தீவிரவாதிகள் தாக்குதல் போன்ற அச்சுறுத்தல்கள் இருக்கும் மாநிலங்களில் பல கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும். ஆனால் மற்ற மாநிலங்களை போல் இல்லாமல், தமிழகத்தில், பதற்றமோ, கலவரமோ அவ்வளவாக கிடையாது. 39 தொகுதிகளிலுமே, சுமூகமான சூழ்நிலையே எப்போதும் காணப்படும். ஒவ்வொரு தேர்தலும் அமைதியாகவே நடந்து முடியும். அதனால்தான், வழக்கம்போல, இந்த முறையும் ஒரே கட்டமாக தமிழகத்துக்கு வாக்குப்பதிவு நடத்த முடிவாகி உள்ளதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் கூறுகின்றன.
அதேபோல, எம்பி தேர்தல்களை எப்போதுமே பல கட்டங்களாக நடத்தி வரும் தேர்தல் ஆணையம், தமிழகம் மற்றும் புதுச்சேரியிலுள்ள தொகுதிகளுக்கான தேர்தலை முதல் கட்டத்திலேயே நடத்தி முடித்து விடும். பெரும்பாலும் முதல் கட்டத்தில் நடக்கும் மாநிலங்களில் பட்டியலில் தமிழ்நாடும், பாண்டிச்சேரியும் அடங்கும். அதுமட்டுமல்லாமல், தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள 1 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடத்தி முடித்துவிடும். அதற்கேற்ப தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் முடிவு செய்யும்.
ஆனால், இந்த முறை தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கான தேர்தலுக்கான தேதியில் சில மாற்றங்கள் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. அதாவது, 7 கட்டங்களாக நடத்தப்படவிருப்பதாக தகவல்கள் வரும் நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடங்கியுள்ள 40 தொகுதிகளுக்கும் கடைசிக் கட்டமான 7-வது கட்டத்தில் தேர்தலை நடத்தலாமா? என்கிற ஆலோசனை தேர்தல் ஆணையத்திடம் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையே, தமிழகத்திற்கான தேர்தலை கடைசி கட்டத்தில் நடத்தலாம் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது யோசனையை மேலிடத்திற்கு தெரிவித்துள்ளதாக கமலாலய வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.