திண்டுக்கல் மாவட்டத்தை பிரித்து பழனியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் தற்போது மொத்த மாவட்டங்களின் எண்ணிக்கை 38 ஆக உள்ளது. தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்வதற்கு முன்பு நடைமுறையில் இருந்த மாவட்டங்கள் 13 தான். அதாவது, சென்னை, தென் ஆற்காடு, வட ஆற்காடு, சேலம், கோவை, நீலகிரி, ராமநாதபுரம், திருநெல்வேலி, திருச்சி, தஞ்சாவூர், மதுரை மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் தான் இருந்தன.
1966ஆம் ஆண்டு சேலம் மாவட்டத்தில் இருந்து தருமபுரியை பிரித்ததே வரலாற்றின் முதல் மாவட்ட பிரிவாகப் பார்க்கப்படுகிறது. அப்போது, சேலம் மாவட்டத்தில் இருந்து தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் ஓசூர் ஆகிய வட்டங்கள் உள்ளடக்கிய பகுதி தருமபுரி மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. நிர்வாக காரணங்களுக்காக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு வருகிறது. அதேசமயம், சேலத்தில் இருந்து ஆத்தூரை பிரித்து தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும், திண்டுக்கல்லில் இருந்து பழனியை பிரித்து தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டுமென தொடர்ந்து கோரிக்கை வலுத்து வருகிறது.
அதேபோல், கோவை மற்றும் திருப்பூரை பிரித்து பொள்ளாச்சியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டுமென்றும், ஈரோடு மாவட்டத்தைப் பிரித்து கோபிச்செட்டிப்பாளையத்தை தலைமையகமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டுமென்ற கோரிக்கைகளும் உள்ளன. இந்நிலையில் தான், புதிய மாவட்டம் பிரிப்பது தொடர்பாக முக்கிய தகவல் ஒன்று கசிந்துள்ளது.
அதாவது, திண்டுக்கல் மாவட்டத்தை பிரித்து பழனியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், புதிதாக உருவாகும் பழனி மாவட்டத்துடன் இணைய மாட்டோம் என்றும் உடுமலை, மடத்துக்குளம் தாலுகா மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதேசமயம், சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும் கொடைக்கானலை திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து பிரித்து பழனியுடன் இணைக்கக் கூடாது என்றும் மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.