தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் சம்பளத்தில், அந்த மாதத்திற்குரிய வரியை மட்டும் பிடித்தம் செய்யும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் மாத வருமானத்தில் வரி பிடித்தம் செய்வதில் இருந்த குளறுபடிகள் நீங்கியதால், அரசு ஊழியர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான மாத சம்பள பில்லை ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை இணையதளம் களஞ்சியம் 2.0 முகவரியில் அந்தந்த துறைகள் மூலமாக பட்டியல் தயாரித்து பதிவேற்றம் செய்யப்படும். அந்த வகையில், இந்தாண்டு அக்டோபர் மாத சம்பளத்தை பதிவேற்றும்போது, அந்த மாத சம்பளத்துடன் அகவிலைப்படி நிலுவைத் தொகையும் சேர்த்து வழங்கியதால், அதற்கான வருமான வரி பிடித்தம் செய்யப்பட்டது.
அதேபோல நவம்பர் மாத சம்பளத்திலும் வரித்தொகையை மீண்டும் பிடித்தம் செய்யப்பட்டது. வருமான வரித்துறை யில் பிடித்தம் செய்யும் பணத்தை திரும்பப் பெறுவதற்கு 6 மாதங்கள் தாமதமாகும். இதற்கு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்நிலையில், டிசம்பர் மாதத்திற்கான சம்பள பட்டியலை தயாரிக்கும் அனைத்து துறை அலுவலரும் இணையதளத்தில் சம்பள பட்டியலை பதிவேற்றம் செய்த பின், சம்பளத்திற்குரிய வரியை மட்டுமே பிடித்தம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான டிசம்பர் சம்பள பட்டியல் என்பது டிச.16ஆம் தேதியில் இருந்து தயாரிக்கப்பட்டு வருகிறது. கடந்த முறை போல், வருமான வரியை அதிக அளவில் பிடித்தம் செய்யாமல், சம்பளத்திற்கான வரியை மட்டும் பிடிக்கும் வகையில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சம்பள பிடித்தத்தில் ஏற்பட்டுள்ள குளறுபடி தற்போது நீங்கியுள்ளது.
அதாவது, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் சம்பளத்தில், அந்த மாதத்திற்குரிய வரியை மட்டும் பிடித்தம் செய்யும் வகையில், மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதனால், டிசம்பர் மாத சம்பளம் எந்த குளறுபடியும் இல்லாமல் வந்து சேரும்.
Read More : 2025ஆம் ஆண்டு உங்களுக்கு சிறப்பாக அமைய விநாயகரை இப்படி வழிபடுங்கள்..!! சிவபெருமானுக்கு தீபம் ஏற்றுங்கள்..!!