மத்திய புலனாய்வுத் துறைக்கு (CBI) வழங்கப்பட்டிருந்த அனுமதியை தமிழக அரசு அதிரடியாக இன்று திரும்பப் பெற்றுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் யாரிடமாவது சிபிஐ விசாரணை நடத்த வேண்டுமானால் அதற்கு அரசிடம் முன் அனுமதியை பெற வேண்டியது கட்டாயமாகி உள்ளது.
டெல்லி சிறப்பு போலீஸ் சட்டத்தின் படி, சிபிஐ அதிகாரிகள் ஒருவரிடம் விசாரிக்க விரும்பினால் அதற்கு முன்பாக அந்த நபர் சார்ந்த மாநில அரசிடம் அனுமதி பெற வேண்டும் என்பது விதிமுறை. மத்திய அரசு – மாநில அரசுகள் இடையேயான இணக்கத்தின் காரணமாக பல்வேறு காலக்கட்டங்களில் இந்த விதிமுறையை மாநில அரசுகள் தளர்த்தி வந்தன. இதுபோன்ற மாநிலங்களில் சிபிஐ எப்போது வேண்டுமானாலும் யாரிடமும் விசாரணை நடத்தி கைது செய்யலாம். இதனிடையே, மோடி தலைமையிலான பாஜக அரசு அமைந்தது முதலாக, தாங்கள் ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் பழிவாங்கும் விதமாக சிபிஐ உள்ளிட்ட அமைப்புகளை பயன்படுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன் தொடர்ச்சியாக, மேற்கு வங்கம், ராஜஸ்தான், கேரளா, பஞ்சாப், தெலங்கானா, மிசோராம் போன்ற பல மாநிலங்கள் சிபிஐக்கு கொடுத்த அனுமதியை திரும்பப் பெற்றன. இந்த மாநிலங்களில் அரசின் அனுமதி இல்லாமல் சிபிஐயால் யாரிடமும் தன்னிச்சையாக விசாரணை நடத்த முடியாது.
இந்நிலையில், மேற்குறிப்பிட்ட மாநிலங்களின் வரிசையில் தற்போது தமிழ்நாடும் இணைந்துள்ளது. சிபிஐக்கு தமிழ்நாட்டில் வழங்கப்பட்டிருந்த அனுமதியை ரத்து செய்வதாக தமிழக அரசு அதிரடியாக அறிவித்தது. எனவே, தமிழக அரசின் அனுமதி இல்லாமல் இனி சிபிஐயால் இங்கு யாரிடமும் விசாரணை நடத்த இயலாது.”மத்திய புலனாய்வுத் துறை எந்த ஒரு மாநிலத்தில் விசாரணை மேற்கொள்வதாக இருந்தாலும், அந்தந்த மாநில அரசின் முன் அனுமதியைப் பெற வேண்டும் என 1946ஆம் ஆண்டின் டெல்லி சிறப்புக் காவல் அமைப்புச் சட்டத்தின் பிரிவு 6 கூறுகிறது. கடந்த 1989 மற்றும் 1992ஆம் ஆண்டுகளில், மேற்படி சட்டத்தின் கீழ், சில வகை வழக்குகளுக்கென வழங்கப்பட்டிருந்த பொதுவான முன் அனுமதியை, இன்று தமிழ்நாடு அரசு திரும்பப் பெற்று ஆணையிட்டுள்ளது.
இதன்படி, மத்திய புலனாய்வுத் துறை தமிழ்நாட்டில் இனி விசாரணை மேற்கொள்வதற்கு முன்பாக தமிழ்நாடு அரசின் முன் அனுமதியைப் பெற்றே விசாரணையை மேற்கொள்ள வேண்டும்,” என்று அந்த அறிவிப்பு கூறுகிறது. இதற்கு முன்பாக இந்தியாவில் சட்டீஸ்கர், ஜார்க்கண்ட், கேரளா, மேகாலயா, மிசோரம், பஞ்சாப், ராஜஸ்தான், தெலங்கானா, மேற்கு வங்கம் ஆகிய 9 மாநிலங்கள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளன. அந்தப் பட்டியலில், பத்தாவது மாநிலமாக தமிழ்நாடு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. சி.பி.ஐ., அமலாக்கத் துறை போன்ற மத்திய சட்ட அமலாக்க அமைப்புகள் ஆளும் கட்சியின் கைப்பாவையாகச் செயல்பட்டு எதிர்க்கட்சிகளைத் துன்புறுத்துவதாக குற்றச்சாட்டுகள் தொடர்ந்து முன்வைக்கப்படுகின்றன. இந்நிலையில், கடந்த ஆண்டு மேற்கு வங்கம் இந்த அனுமதியைத் திரும்பப் பெற்றது. பிறகு, ஒவ்வொரு மாநிலமாக இந்த அனுமதியை திரும்பப் பெற்றன.
மத்தியப் புலனாய்வுத் துறையின் பின்னணி: இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பாகவே தேசிய அளவில், எல்லா மாகாணங்களிலும் விசாரிக்கும் அதிகாரங்களைக் கொண்ட ஒரு புலனாய்வு அமைப்புக்கான தேவை என்பது உணரப்பட்டது. இரண்டாம் உலகப் போர் வெடித்தபோது, போருக்கான நிதி திரட்டும் முயற்சிகளில் பல முறைகேடுகளும், ஊழல்களும் நடக்க ஆரம்பித்தன. மாகாண அரசுகளின் கீழே இருந்த காவல் துறைகளால் இந்தப் பிரச்னைகளைச் சமாளிக்க முடியாத நிலை நிலவியது. ஆகவே, இம்மாதிரி தேசிய அளவிலான ஓர் அமைப்புக்கான தேவை இன்னும் அதிகமானது. பிரிட்டிஷ் அரசு 1941 யுத்தத் துறையில் ஒரு டி.ஐ.ஜியின் கீழ் ஒரு சிறப்பு காவல் அமைப்பை உருவாக்குவதற்கான ஆணையைப் பிறப்பித்தது
இதையடுத்து அப்போதைய பிரிட்டிஷ் அரசு 1941 யுத்தத் துறையில் ஒரு டி.ஐ.ஜியின் கீழ் ஒரு சிறப்புக் காவல் அமைப்பை உருவாக்குவதற்கான ஆணையை பிறப்பித்தது. இந்திய அரசின் யுத்தம் மற்றும் விநியோகத் துறையில் எழும் ஊழல் புகார்களை விசாரிப்பதே இதன் முக்கியப் பணி எனக் கூறப்பட்டது. 1942ல் ரயில்வே துறையில் கூறப்பட்ட ஊழல் விவகாரங்களை விசாரிக்கவும் அந்த அமைப்புக்கு உத்தரவிடப்பட்டது.
சி.பி.ஐ அமைப்புக்கென இயற்றப்பட்ட சட்டம்: ஓர் அரசாணை மூலமாக இந்த அமைப்பு இயங்கிவந்த நிலையில், 1943இல் இதற்கென ஒரு சட்டம் உருவாக்கப்பட்டது. அதன்படி உருவாக்கப்பட்ட சிறப்புக் காவல் படைக்கு, பிரிட்டிஷ் இந்தியாவின் எந்தப் பகுதியிலும் மத்திய அரசு தொடர்பான எந்தவொரு துறையிலும் நடக்கும் புகார்களை விசாரிக்கும் அதிகாரம் வழங்கப்பட்டது. கடந்த 1943ஆம் ஆண்டில் போடப்பட்ட சட்டத்தின் காலம் 1946 செப்டம்பர் 30ஆம் தேதி முடிவுக்கு வந்தது. ஆனால், தேசிய அளவில் ஊழல் புகார்களை விசாரிப்பதற்கான ஒரு தேவை தொடர்ந்து இருப்பதாக உணரப்பட்டது. இதையடுத்து இதற்கென 1946ஆம் ஆண்டின் டெல்லி சிறப்புக் காவல் அமைப்புச் சட்டம் இயற்றப்பட்டது. இந்தச் சட்டத்தின் இரண்டாவது பிரிவு சிபிஐக்கு அளிக்கும் அதிகாரங்களின்படி மத்திய அரசின் ஆட்சிப் பிரதேசங்களில் நேரடியாக விசாரணைகளை மேற்கொள்ளலாம்.
அதே நேரம் ரயில்வே பகுதிகள் மற்றும் பிற மாநிலங்களிலும் விசாரணைகளை இந்த அமைப்பு மேற்கொள்ள முடியும். ஆனால், பிற மாநிலங்களில் விசாரணை செய்ய அந்தந்த மாநில அரசுகளின் முன் அனுமதியைப் பெற வேண்டும். இந்தச் சட்டம் இயற்றப்பட்ட பிறகு, சிறப்புக் காவல் பிரிவு மத்திய உள்துறையின் கீழ் கொண்டு வரப்பட்டது. இந்திய அரசின் எல்லாத் துறைகளிலும் நடக்கும் முறைகேடுகளை விசாரிக்கும் அதிகாரம் அந்த அமைப்புக்குத் தரப்பட்டது. 1948இல் ஒரு இன்ஸ்பெக்டர் ஜெனரல் இந்த அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டார். இறக்குமதி – ஏற்றுமதி கட்டுப்பாடுகளில் நடக்கும் முறைகேடுகள் குறித்து விசாரிப்பதற்காக 1953இல் இதில் அமலாக்கப் பிரிவு உருவாக்கப்பட்டது. நாட்கள் செல்லச் செல்ல, ஊழல் தடுப்பு, ஏற்றுமதி – இறக்குமதி முறைகேடுகள் தவிர்த்த வேறு பல விஷயங்களும் இந்தச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டன.
பிறகு 1963வாக்கில் இந்திய தண்டனைச் சட்டத்தின் 91 பிரிவுகளின் கீழ் வரும் குற்றங்களையும் 16 மத்திய சட்டங்களின் கீழ் வரும் குற்றங்களையும் விசாரிக்கும் அதிகாரம் இந்த அமைப்புக்குத் தரப்பட்டது. ஒருங்கிணைந்து செயல்படும் குற்றக் குழுக்கள், ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்தில் குற்றங்களில் ஈடுபடும்போது அதை சி.பி.ஐ. விசாரிக்கும். ஆனால், அந்த மாநில அரசினுடைய கோரிக்கையின் பேரிலேயே இது நடக்கும். கடந்த 1964ஆம் ஆண்டில் பொருளாதார குற்றப் பிரிவும் இதன் கீழ் கொண்டுவரப்பட்டது. ஆகவே, சிபிஐயில் பொதுவான குற்றங்களை விசாரிக்கும் பிரிவு மற்றும் பொருளாதார குற்றங்களை விசாரிக்கும் பிரிவு என இரண்டு பிரிவுகள் உருவாயின. அதற்குப் பிறகு உணவுப் பொருட்களைப் பதுக்குவதைத் தடுக்க ஒரு பிரிவு உருவாக்கப்பட்டு, பிறகு அது பொருளாதார குற்ற பிரிவுடன் இணைக்கப்பட்டது.
இதற்குப் பிறகு, நாட்டையே உலுக்கும் வகையில் குற்றங்கள் நடைபெற்றபோது, அந்தக் குற்றங்களை விசாரிக்க சிறப்புப் பிரிவுகள் உருவாக்கப்பட்டன. அதன்படி, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கு, பாபர் மசூதி இடிப்பு வழக்கு, மும்பை குண்டு வெடிப்பு வழக்கு போன்ற வழக்குகளை சி.பி.ஐ. விசாரித்தது. இந்தக் கட்டத்தில் இந்தியாவின் முதன்மையான புலனாய்வு அமைப்பாக மத்திய புலனாய்வுத் துறை உருவெடுத்தது. சி.பி.ஐ. விசாரணைகளை மேற்கொள்வதற்கு முன்பாக முன் அனுமதியைப் பெறவேண்டும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
சி.பி.ஐ. மாநில அரசுகளிடம் அனுமதி பெற வேண்டுமா? சி.பி.ஐ. உருவாக்கப்பட்ட டெல்லி சிறப்பு காவல்துறை சட்டத்தின்படி, மத்திய அரசின் ஆட்சிப் பிரதேசம் அல்லாத மாநிலங்களில் மாநில அரசின் அனுமதியைப் பெறாமல் அந்த மாநிலத்தில் வழக்கைப் பதிவு செய்யவோ, விசாரணையைத் தொடங்கவோ முடியாது. பொதுவாக இந்திய மாநிலங்கள் அனைத்துமே சில வகை குற்றங்களைக் குறிப்பிட்டு, அந்தக் குற்றங்களை விசாரிக்க சி.பி.ஐக்கு முன் அனுமதியைத் தந்திருக்கின்றன. ஆனால், 2014க்குப் பிறகு மத்தியப் புலனாய்வு அமைப்புகள் அரசியல் ரீதியாக பயன்படுத்தப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்திருப்பதால் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் அரசுகள் இந்த முன் அனுமதியை ரத்துசெய்து வருகின்றன.
முன் அனுமதி ரத்துசெய்யப்பட்ட மாநிலத்தில் இனி சி.பி.ஐ. வழக்குப் பதிவுசெய்ய விரும்பினால் ஒவ்வொரு வழக்கையும் குறிப்பிட்டு, அனுமதியைத் தனித்தனியாகப் பெற வேண்டும். கடந்த 2015ஆம் ஆண்டில் மிசோரம் மாநில காங்கிரஸ் அரசு இந்தப் பொது அனுமதியை ரத்து செய்தது. 2018இல் ஆந்திர மாநிலமும் மேற்கு வங்கமும் இந்தப் பொது அனுமதியை ரத்து செய்தன. 2019ல் ஆட்சி மாற்றம் நடந்த பிறகு, ஆந்திர மாநிலம் மீண்டும் பொது அனுமதியை வழங்கியது. சட்டீஸ்கர் 2019 ஜனவரியில் இந்தப் பொது அனுமதியை ரத்து செய்தது. 2020 ஜூலையில் ராஜஸ்தானும் அக்டோபரில் மகாராஷ்டிராவும் இந்த அனுமதியை ரத்து செய்தன. நவம்பரில் கேரளா, ஜார்க்கண்ட், பஞ்சாப் ஆகியவை இந்த அனுமதியை ரத்து செய்தன. திரிபுரா, மேகாலயா ஆகியவையும் இந்த அனுமதியை ரத்து செய்துள்ளன. தற்போது தமிழ்நாடு இந்தப் பட்டியலில் இணைந்துள்ளது.
இனி என்ன ஆகும்? பொது அனுமதி திரும்பப் பெறப்பட்டுவிட்டதால் தமிழ்நாட்டில் வசிப்பவர்கள் மீது வழக்குகளைப் பதிவுசெய்து விசாரிக்க மாநில அரசின் அனுமதியைப் பெற வேண்டும். ஒவ்வொரு வழக்கிற்கும் இதை தனித் தனியாக அனுமதி பெற வேண்டும். ஆனால், புதிதாக வழக்குகளைப் பதிவு செய்யத்தான் இந்த அனுமதியைப் பெற வேண்டும். ஏற்கெனவே பதிவுசெய்யப்பட்ட வழக்குகளை சி.பி.ஐ. தொடர்ந்து விசாரிக்க முடியும். இருந்தபோதும் உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் ஆகியவை நினைத்தால் சம்பந்தப்பட்ட மாநிலங்களின் அனுமதி இன்றி, ஒரு வழக்கை விசாரிக்கச் சொல்ல உத்தரவிட முடியும் என 2010ஆம் ஆண்டில் ஐந்து நீதிபதிகள் அடங்கிய உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாச்ோன அமர்வு உத்தரவிட்டது. ஆனால், இந்த அதிகாரத்தை விதிவிலக்காகவும், மிக மிக கவனமாகவுமே பயன்படுத்த வேண்டுமெனவும் உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது.
இதற்குப் பிறகு 2022இல் கொல்கத்தா உயர்நீதிமன்றம் அளித்த ஒரு தீர்ப்பில், ஊழல் வழக்குகளை இந்தியா முழுவதுமே ஒரே மாதிரி கையாள வேண்டும் என்றும் பொது அனுமதியை ரத்து செய்த மாநிலத்தில் வசிக்கும் ஒரு மத்திய அரசு ஊழியர் ஊழலில் ஈடுபட்டால் அவர் மீது ஊழல் வழக்கைப் பதிவு செய்ய முடியாது என்ற நிலை இருக்க முடியாது எனவும் கூறியிருக்கிறது. ஆனால், இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, நிலுவையில் உள்ளது. ஆகவே, கொல்கத்தா உயர் நீதிமன்ற ஆணை தற்போதும் நடைமுறையில் உள்ளதால் அதை முன் வைத்து, முன் அனுமதியைத் திரும்பப் பெற்ற மாநிலங்களில் வசிக்கும் மத்திய அரசு ஊழியர்கள் மீது சி.பி.ஐ. புதிய வழக்குகளைப் பதிவு செய்ய முடியும். மாநில அரசுகளின் முன் அனுமதி என்பது சி.பி.ஐ அமைப்பின் வழக்குகளுக்கு மட்டுமே தேவை. அமலாக்கத் துறை, தேசியப் புலனாய்வு முகமை, வருமான வரித் துறை ஆகியவை வழக்கம்போலவே வழக்குகளைப் பதிவு செய்து விசாரணையை நடத்த முடியும்.