பொங்கல் பண்டிகைக்கு வெளி மாநிலங்களில் இருந்து வேட்டி, சேலைகளை வாங்க முயற்சி நடப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஈரோட்டில் பாஜக சார்பில் தேசியக் கொடி பேரணி நடைபெற்றது. இதில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பங்கேற்றார். இதனைத் தொடர்ந்து, கைத்தறி தின விழாவையொட்டி, நெசவாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், ”சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையிலும், சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையிலும், மாநிலம் முழுவதும் 79 இடங்களில் பாஜக சார்பில் தேசியக் கொடி விழிப்புணர்வு பேரணி நடக்கவுள்ளது. ஆகஸ்ட் 13ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை பொதுமக்கள் தங்கள் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும். இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பாக வெளியிட வேண்டும்.
தேசிய அளவில் நெசவாளர்கள் அதிகமுள்ள மாநிலங்களில் தமிழகம் இரண்டாமிடத்தில் உள்ளது. தேசிய கைத்தறி மேம்பாட்டுத் திட்டம், முத்ரா கடன் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் மூலம் நெசவாளர்களுக்கு மத்திய அரசு மானியங்களை வழங்கி வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் நெசவாளர்களே இருக்கக் கூடாது என திமுக அரசு வேலை செய்து வருகிறது. தமிழகத்தில் பொங்கலின்போது, 1.80 கோடி விலையில்லா வேட்டி, சேலை வழங்கப்பட்டு வருகிறது. இதனை உற்பத்தி செய்ய ஜூலை மாதம் டெண்டர் விடுவது வழக்கம். அப்போதுதான் ஜனவரி மாதத்தில் வேட்டி, சேலை வழங்க முடியும்.
இதனை நெய்வதன் மூலம் தமிழக நெசவாளர்களுக்கு கூலியாக ரூ.486 கோடி கிடைக்கும். இந்த முறை வேட்டி, சேலையை வெளிமாநிலங்களில் இருந்து வாங்க தமிழக அரசு முயற்சி செய்து வருகிறது. அதனால்தான், ஜூலை வரை நூல் வாங்குவதற்கான டெண்டர் விடவில்லை. வெளிமாநிலங்களில் வேட்டி, சேலையை வாங்கினால் 10 சதவீதம் கமிஷன் கிடைக்கும் என யோசிக்கின்றனர். திமுக தேர்தல் அறிக்கையில் நெசவாளர்களுக்கு 1,000 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என அறிவித்தனர். இந்த வாக்குறுதி நிறைவேற்றவில்லை. மாறாக ஒரு யூனிட்டுக்கு 70 பைசா உயர்த்தியுள்ளனர்”. இவ்வாறு அவர் பேசினார்.