பொங்கல் திருநாளை முன்னிட்டு அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1,000 ரொக்கம் வழங்கப்படும் என முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அத்துடன் ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை வழங்கவும் ஆணை பிறப்பித்துள்ளார். பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்வினை வரும் 2ஆம் தேதி சென்னையில் முதல்வரும், மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட அமைச்சர்களும் தொடங்கி வைப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது. ரேஷன் அட்டைதாரர்கள் வரும் 2ஆம் தேதி முதல் பொங்கல் பரிசை பெற்றுக் கொள்ளலாம். இருப்பினும் அனைவருக்கும் இந்த பரிசுத் தொகை கிடைக்காது.

பொங்கல் பரிசு யாருக்கு கிடைக்கும்?
பொங்கல் பரிசு ரூ.1,000 மற்றும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை ஆகியவை அரிசி ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே கிடைக்கும். சர்க்கரை அட்டை வைத்து உள்ளவர்களுக்கு இது கிடைக்காது. தமிழ்நாட்டில் மொத்தம் 5 வகையான ரேஷன் கார்டுகள் உள்ள நிலையில், அதில் 3 வகையான கார்டுகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு கிடைக்கும். PHH, PHH-AAY, NPHH ஆகிய 3 வகையான அட்டைகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு கிடைக்கும். NPHH-S கார்டினை வைத்திருப்பவர்களுக்கு சர்க்கரை மட்டுமே கிடைக்கும். NPHH-NC கார்டினை வைத்திருப்பவர்களுக்கு எந்த பொருளும் ரேஷன் கடைகளில் கிடைக்காது. இந்த இரண்டு வகையான ரேஷன் அட்டைகளை வைத்திருப்பவர்களுக்குப் பொங்கல் பரிசு எதுவும் கிடைக்காது.
எப்போது கிடைக்கும்?
ஒவ்வொரு ரேஷன் கடை பணியாளர்களும் நாள் ஒன்றுக்கு 100 முதல் 200 வரையிலான நபர்கள் பெறுவதற்கு ஏற்ப டோக்கன்களை விநியோகிப்பார்கள். ரேஷன் கடைகளில் வழக்கம் போல, கைரேகை வைத்தால் மட்டுமே பொங்கல் பரிசு கிடைக்கும். பொங்கல் பரிசுப் பொருட்களை பெறுவதற்கான டோக்கன்கள் வரும் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் விநியோகிக்கப்பட உள்ளது. எனவே, மக்கள் அந்தந்த தேதிகளில் எந்தவித கூட்டமின்றி எளிதான முறையில் பொங்கல் பரிசு தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம். இதற்கிடையே, எதிர்க்கட்சிகள் மற்றும் விவசாயிகளின் கோரிக்கைக்கு ஏற்ப பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு, பனை வெல்லம் போன்றவை வழங்கலாமா ? என்று ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.