நீட் தேர்வுக்கு விலக்கு பெறுவதில் தாமதம் கூடாது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழ்நாட்டில் எந்தத் துயரம் நடந்துவிடக் கூடாது என்று அனைவரும் வேண்டிக் கொண்டிருந்தார்களோ அந்தத் துயரம் ஒரே வாரத்தில் 2-வது முறையாக நிகழ்ந்திருக்கிறது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரைச் சேர்ந்த முரளி கிருஷ்ணா என்ற மாணவர் மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வில் தோல்வி அடைந்துவிடுவோமோ என்ற அச்சத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். தற்கொலை செய்து கொண்டதற்கான காரணத்தை விளக்கி கடிதம் ஒன்றையும் அவர் எழுதி வைத்துள்ளார். ஒருபுறம் கிராமப்புற மாணவர்களால் நீட் தேர்வை எதிர்கொண்டு வெற்றி பெற முடியாது என்ற அச்சத்தால் ஏற்படும் மன அழுத்தம், மறுபுறம் தமது பிள்ளைகளை எப்படியாவது மருத்துவராக்கிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் பெற்றோர்கள் கொடுக்கும் அழுத்தம் ஆகிய இரண்டையும் தாங்கிக் கொள்ள முடியாத மாணவர்கள்தான் தேர்வுக்கு முன்பே தற்கொலை செய்து கொள்கின்றனர்.
நடப்பு ஆண்டில் இந்த அழுத்தத்திற்கு இறையாகிய முதல் மாணவர் முரளி கிருஷ்ணா அல்ல… ஏற்கனவே கடந்த புதன்கிழமை சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த தனுஷ் என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இவை இனியும் தொடரக் கூடாது. மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வு மிகப்பெரிய சமூக அநீதி. அது உடனடியாக அகற்றப்பட வேண்டும். ஆனால், மாணவர்களின் தற்கொலைக்கு அவர்களிடம் தன்னம்பிக்கையும், விழிப்புணர்வும் இல்லாததும், அவர்களின் குடும்பத்தினரிமிருந்து திணிக்கப்படும் அழுத்தமும்தான் மிக முக்கியக் காரணம். மாணவர்களை தற்கொலைக்குத் தூண்டும் நீட் தேர்வை ரத்து செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு மேலும் இந்த விஷயத்தில் தமிழக அரசு தாமதம் காட்டக் கூடாது. தமிழக முதல்வர் உடனடியாக டெல்லி சென்று பிரதமரை சந்தித்து நீட் விலக்கு சட்டத்திற்கு ஒப்புதல் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நீட் தேர்வுக்கு இன்னும் 8 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், அத்தேர்வை எழுதவிருக்கும் மாணவர்கள் மத்தியில் நிலவும் அச்சம், அழுத்தம், மன உளைச்சல் ஆகியற்றைப் போக்குவதற்காக அவர்களுக்கு தொலைபேசி வழியிலான கவுன்சலிங் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.