பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தனது டுவிட்டரில் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
2022-23 ஆம் வருடத்தின் முதல் காலாண்டில் தமிழகத்திற்கு வந்த நேரடி அந்நிய முதலீடுகளின் மதிப்பு ரூ.5836 கோடியாக அதிகரித்துள்ளது. இது கடந்த வருடம் இதே காலத்தில் பெறப்பட்ட ரூ.5640 கோடியை விட ரூ.196 கோடி அதிகம் என்றாலும் தமிழகத்தின் வளர்ச்சிக்கும், திறனுக்கும் போதாது. இதே காலத்தில் மராட்டியம் ரூ.40,386 கோடி (31.59%), குஜராத் ரூ.24,692 கோடி(19.31%), கர்நாடகம் ரூ.21,480 கோடி (16.80%), தில்லி ரூ.17,988 கோடி (14%) அந்நிய முதலீட்டை ஈர்த்துள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு 4.46% மட்டுமே ஈர்த்துள்ளது. மேலும் ஐந்தாவது இடத்தையே பிடித்திருக்கிறது.
2019 அக்டோபர் முதல் கடந்த ஜூன் வரையிலான சுமார் மூன்று வருடங்களில் ஒட்டுமொத்தமாக தமிழ்நாடு ரூ.52,676 கோடி (4%) மட்டுமே அந்நிய முதலீட்டை பெற்றுள்ளது. இதிலும் மராட்டியம், கர்நாடகம், குஜராத், தில்லி ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக ஐந்தாவது இடத்தில் தான் இருக்கிறது.
இந்தியாவில் ஒட்டுமொத்த மாநில உற்பத்தி மதிப்பில் மராட்டியம் முதலிடத்திலும் அடுத்தபடியாக தமிழகம் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.
தமிழகத்தில் மிகச்சிறந்த மனிதவளம் உள்ளது. இந்தக் காரணிகளின்படி பார்த்தால் அந்நிய முதலீட்டை பெறுவதில் தமிழகம் முதல் இரு இடங்களுக்குள் வந்திருக்க வேண்டும். தமிழகத்தின் வளர்ச்சிக்கு அந்நிய முதலீடுகள் அதிகம் தேவை. இதற்காக பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருவதைப் போல தமிழகத்தை ஐந்து தொழில் முதலீட்டு மண்டலங்களாக பிரித்து, ஒவ்வொன்றுக்கும் ஒரு முதலீட்டு ஆணையரை நியமித்து அதிக முதலீட்டை பெறுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.