எந்த காலத்திலும் டெல்டா மாவட்டங்கள் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் நிலக்கரி எடுக்கும் திட்டங்களை தமிழ்நாடு அரசு அனுமதிக்காது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்..
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களில் நிலக்கரி எடுக்கும் திட்டம் குறித்து பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.. இந்த தீர்மானத்தின் மீது தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்து வருகிறார்.. அப்போது “ தமிழ்நாட்டின் காவிரி டெல்டா பகுதிகளில் பழுப்பு நிலக்கரி எடுப்பதற்கான ஏல அறிவிப்பை ஒன்றிய அரசின் நிலக்கரி அமைச்சகம் வெளியிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..
தமிழக அரசிடம் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.. இந்த நிலக்கரி சுரங்க அறிவிப்பு வந்த உடன் முதலமைச்சர் விரைவாக செயல்பட்டு பிரதமருக்கு கடிதம் எழுதினார். பாதுகாக்கப்பட்ட வேளாண் நிலங்களில் நிலக்கரி எடுக்கும் திட்டத்தை தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்பதை அந்த கடிதத்தில் கூறியிருந்தார்..
தமிழக அதிகாரிகளும், மத்திய நிலக்கரி அமைச்சக அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர்.. எனவே எந்த காலத்திலும் டெல்டா மாவட்டங்கள் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் ஒருபோதும் இத்தகைய திட்டங்களை தமிழ்நாடு அரசு அனுமதிக்காது..” என்று தெரிவித்தார்..