தமிழ்நாடு அரசு பாஜகவுக்கு எதிராக செயல்படுகிறதா என்று ஆய்வு செய்வதற்காக 4 பேர் கொண்ட குழு இன்று தமிழகம் வர உள்ளது.
சென்னையை அடுத்த பனையூரில் உள்ள தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வீட்டின் முன்பு நடப்பட்ட அவரது கட்சியின் கொடி கம்பத்தை காவல்துறை பாதுகாப்புடன் மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
அதே போல், கிண்டி ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தமிழ்நாடு அரசு பாஜகவை வெறுப்புணர்வுடன் கையாள்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் பாஜக தொண்டர்கள் மாநில அரசால் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து ஆய்வு செய்ய 4 பேர் கொண்ட குழுவை பாஜக தேசிய தலைவர் நட்டா அமைத்துள்ளார். அதன்படி சதானந்த கவுடா, சத்ய பால் சிங், புரந்தேஸ்வரி, பி.சி. மோகன் ஆகியோர் கொண்ட குழு இன்று தமிழ்நாடு வருகிறது.
தமிழ்நாடு அரசு பாஜகவுக்கு எதிராக செயல்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய வரும் இந்த குழு, நாளை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இல்லத்தில் ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.