தமிழகத்தில் இன்று முதல் 13-ம் தேதி வரை பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென்னிந்திய பகுதிகளின் மேல்வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில்ஒருசில இடங்களிலும், புதுச்சேரி காரைக்கால் பகுதிகளிலும் இன்று முதல் 13-ம் தேதிவரை பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 14, 15-ம் தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.
12-ம் தேதி கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இன்று முதல் 13-ம் தேதி வரை தமிழக உள் மாவட்டங்களின் சமவெளிப் பகுதிகளில் ஒருசில இடங்களில் 106 டிகிரி, இதர தமிழக மாவட்டங்களின் சமவெளிப் பகுதிகளில் 102 டிகிரி, கடலோர தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் 98 டிகிரி ஃபாரன்ஹீட் அளவில் வெப்பநிலை இருக்கக் கூடும்.