தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் டிசம்பர் 9ஆம் தேதி கூடுவதாக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு கூறியுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம், டிசம்பர் 9ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்த கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பதை அலுவல் ஆய்வுக் குழு கூடி முடிவெடுக்கும். சட்டமன்ற நிகழ்வுகள் ஏற்கனவே நேரலை செய்யப்பட்டு வரும் நிலையில், முழுமையாக நேரலை செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின் போது ஏஐ தொழில்நுட்பம் தொடர்பாக பேசும் வாய்ப்பு கிடைத்தது.
ஏஐ தொழில் நுட்பத்தில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக விளங்கி வருகிறது. இது மாணவர்களுக்கு பெரிதும் பயனளிக்கும். அதேபோல் சட்டப்பேரவையிலும் காதிகமில்லாத முறைதான் உள்ளது” என்று தெரிவித்தார்.
டிசம்பர் 9ஆம் தேதி கூடும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை, மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பழக்கத்தை தடுப்பது, அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது, தேர்தல் வாக்குறுதிகள், உள்ளாட்சித் தேர்தல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.