தமிழக அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளதை அடுத்து எந்ததெந்த துறை யார் யாருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
தமிழ்நாடு அமைச்சரவையில் 10 அமைச்சர்களின் இலாகாக்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன. சில அமைச்சர்களிடம் இருந்த துறைகள் பறிக்கப்பட்டு மற்ற அமைச்சர்களுக்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இன்று அமைச்சராக பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கூட்டுறவுத் துறை அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக மாற்றப்பட்டு உள்ளார். ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்த பெரியகருப்பனுக்கு கூட்டுறவுத் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருக்கும் ராஜகண்ணப்பனுக்கு, அமைச்சர் காந்தி வசம் இருந்த கதர் மற்றும் கிராம தொழில் வாரியம் துறைகள் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபுவுக்கு, அமைச்சர் முத்துசாமி வசம் இருந்த சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு, அமைச்சர் ஐ.பெரியசாமி வசம் இருந்த புள்ளியியல் துறை கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் மதிவேந்தனுக்கு வனத்துறையும், அமைச்சர் ராமச்சந்திரனுக்கு சுற்றுலாத் துறையும் என ஒதுக்கப்பட்டுள்ளன. சுற்றுசூழல் துறை அமைச்சர் மெய்யநாதனுக்கு முன்னாள் படைவீரர்கள் நலத்துறை கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அவரிடம் இருந்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை உதயநிதி ஸ்டாலினுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.