தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வில் 67,000 பேர் தேர்வு எழுதவில்லை என தேர்வாணையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் 2ஆம் நிலை காவலர், சிறைக் காவலர், தீயணைப்பு துறை காவலர்கள் ஆகியவற்றில் காலியாக உள்ள 3,552 பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு இன்று நடைபெற்றது. சென்னை, கோவை உள்ளிட்ட 35 மாவட்டங்களில், 295 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு, சுமார் 3.66 லட்சம் பேர் தேர்வை எழுதினர். இதில் 2,99,887 பேர் ஆண்கள், 66,811 பேர் பெண்கள், 59 பேர் மூன்றாம் பாலினத்தவர் ஆவர்.

சென்னையில் கே.கே நகர், ராமாபுரம், கிண்டி அண்ணா பல்கலைக்கழகம், வேளச்சேரி, அமைந்தகரை உள்ளிட்ட மொத்தம் 16 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு ஏராளமானோர் தேர்வை எழுதினர். தேர்வு மையத்துக்கு வந்த மாணவர்களை காவல்துறை அதிகாரிகள் தீவிர சோதனை செய்த பின்னரே தேர்வு மையத்துக்குள் அனுமதித்தனர். காலை 10 மணிக்கு தொடங்கிய, இந்த தேர்வானது மதியம் 12.40 மணிக்கு நிறைவடைந்தது. இந்நிலையில் இந்த தேர்வுக்கு விண்ணப்பித்த 3.66 லட்சம் பேரில் 67,000 பேர் தேர்வை எழுதவில்லை என தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் தகவல் தெரிவித்துள்ளது.
தேர்வில் 70 மதிப்பெண்களுக்கு பொது அறிவு கேள்விகளும், 80 மதிப்பெண்கள் தமிழ் தகுதி தேர்வு கேள்விகளும் இடம்பெற்றுள்ளது. பொது அறிவு கேள்விகளும் தமிழிலேயே கேட்கப்பட்டதால் ஆங்கில வழிக் கல்வி படித்தவர்களுக்கு, கேள்விகளை புரிந்து கொள்ள மிகவும் சிரமமாக இருந்ததாக தேர்வு எழுதியவர்கள் தெரிவித்தனர். மேலும் இரண்டு பட்டம் பெற்றவர்களும், கூடுதல் கல்வித்தகுதி பெற்றவர்களும் தேர்வு எழுதுவதால், கட் ஆஃப் மதிப்பெண்கள் அதிகமாவதாகவும், இந்த வேலைக்கு குறைந்தபட்ச தகுதி உடையவர்களுக்கு வேலை பறிபோகும் சூழ்நிலை ஏற்படுகிறது எனவும் தேர்வு எழுதியவர்கள் தெரிவித்துள்ளனர்.