தமிழ்நாட்டில் அடுத்த 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மிக்ஜாம் புயல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களை புரட்டிப் போட்டு கடந்து சென்றுள்ள நிலையில், மீண்டும் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வெளியான அறிவிப்பு பொதுமக்களைக் கலக்கமடைய செய்துள்ளது. கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (டிச. 8) தமிழ்நாட்டின் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நாளை (டிச. 9) தமிழ்நாட்டின் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை மற்றும் தஞ்சை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
டிசம்பர் 10 முதல் 13ஆம் தேதி வரை தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.