குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கும் திட்டம் வரும் செப்டம்பர் 15-ம் தேதி தொடங்கப்படும் என்று தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
2023-24-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை தமிழக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று காலை இ பட்ஜெட்டாக தாக்கல் செய்து வருகிறார்.. அப்போது பேசிய அவர் “ 2006 முதல் 2011 வரை சராசரி 8 சதவீதமாக மாநிலத்தின் சொந்த வரிவருவாய், அடுத்த 10 ஆண்டுகள் தொடர்ந்து வீழ்ச்சி கண்டு, 2020-21-ல் 5.58 சதவீதமாக குறைந்தது.. கடந்த 2 ஆண்டுகளாக இந்த அரசு எடுத்த முயற்சிகளின் பலனாக இந்த விகிதம் 6.11 சதவீதமாக உயர்ந்துள்ளது..” என்று தெரிவித்தார்.. மேலும் பல்வேறு முக்கிய அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டார்.
தமிழக பெண்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த திட்டம் குறித்த அறிவிப்பையும் அவர் வெளியிட்டார்.. குடும்பத்தலைவிக்கு மாதம் ரூ.1000 உரிமை தொகை வழங்கும் திட்டம் இந்த நிதியாண்டில் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.. இதுகுறித்து பேசிய அவர் “ குடும்ப தலைவிக்கு உரிமைத்தொகை ரூ.1000 வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறார்.. அதன்படி, தகுதிவாய்ந்த குடும்பங்களின், குடும்பத்தலைவிக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வரும் நிதியாண்டில் வழங்கப்படும்.. ஒன்றிய அரசால் பெருமளவில் உயர்த்தப்பட்டுள்ள சமையல் எரிவாயு விலை, விலைவாசி உயர்வால் அதிகரித்துள்ள குடும்ப செலவு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை என்பது, அவர்களின் அன்றாட வாழ்க்கைக்கு பெரும் உதவியாக இருக்கும்..
வரலாற்று சிறப்புமிக்க இந்த திட்டம், கலைஞரின் நூற்றாண்டான இந்த ஆண்டில், செப்டம்பர் மாதத்தில், அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ம் நாள் முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட உள்ளது.. இத்திட்டத்தின் கீழ் மகளிர் பயனடைவதற்கான வழிமுறைகள் வகுக்கப்பட்டு விரைவில் வெளியிடப்படும்.. இந்த திட்டத்திற்கு ரூ.7000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது..” என்று தெரிவித்தார்..