சென்னையில் உடல்நலக் குறைவால் காலமான தமிழறிஞர் அவ்வை நடராஜன் உடலுக்கு முதலமைச்சர் முக.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினர்.
தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை செயலாளர், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் அவ்வை நடராஜன். 87 வயதான இவர், அண்மைக் காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், சென்னை செனாய் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்தார்.

இதையடுத்து, அண்ணாநகரில் உள்ள அவரது இல்லத்தில், பொதுமக்கள் இன்று அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அவ்வை நடராஜன் உடலுக்கு முதலமைச்சர் முக.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினர். அமைச்சர்கள் பொன்முடி, எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன் ஆகியோரும் நேரில் அஞ்சலி செலுத்தினர். மேலும், அவ்வை நடராசனின் மறைவுக்கு கல்வியாளர்கள், எழுத்தாளர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் உட்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.