தமிழகத்தின் மறைந்த முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016 இல் டிசம்பர் 5ஆம் தேதி உடல் நலக்குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 5ஆம் தேதி ஜெயலலிதாவின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டு வருகின்றது.
அந்த வகையில், இன்றும் ஆறாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இந்த நினைவு நாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சியினர் அதிமுக தொண்டர்கள் மற்றும் ஜெயலலிதாவின் விசுவாசிகள் அனைவரும் அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திக்கொண்டு இருக்கின்றனர்.
மாநிலம் முழுவதும் இந்த அஞ்சலி கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. இத்தகைய சூழலில், தெலுங்கானா மாநில கவர்னர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
அந்த பதிவில், “பணிந்து நின்று தான் பணி செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. துணிந்து நின்றும் பணி செய்யலாம் என நிரூபித்த பெண் ஆளுமை மரியாதைக்குரிய முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் நினைவு தின நாளில் நினைவை போற்றுகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.