அமெரிக்க இளைஞருடன் தமிழக பெண் வீடியோ கான்பரன்சிங் மூலம் திருமணம் செய்ய உயர்நீதிமன்ற கிளை அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் தாலுகாவைச் சேர்ந்த வம்சி சுதர்ஷினி (வயது 28), என்ற பெண் உயர்நீதிமன்ற கிளையில் மனு ஒன்று தாக்கல் செய்தார். அதில், ”தான் என்ஜினீயரிங் முடித்துள்ளேன். இந்தியாவைச் சேர்ந்த ராகுல் என்பவர் தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார். அவர் அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அவரும் நானும் பழகினோம். தற்போது திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளோம். இதற்கு எங்கள் பெற்றோர் சம்மதம் தெரிவித்துள்ளனர். நாங்கள் இருவரும் இந்து மதத்தை சேர்ந்தவர்கள். நாங்கள் இங்குள்ள சிறப்பு திருமணச் சட்டத்தின்படி திருமணம் செய்து கொள்ள தகுதி பெற்றுள்ளோம்.

இந்த சட்டத்தின்படி திருமணம் செய்து கொள்ள ஆன்லைன் மூலம் கடந்த மே 5ஆம் தேதி அன்று விண்ணப்பித்தோம். பின்னர், நாங்கள் இருவரும் திருமண பதிவு அதிகாரி முன்பு நேரில் ஆஜரானோம். ஆனால், எங்கள் திருமண விண்ணப்பத்தின்பேரில் முடிவு எடுக்க 30 நாட்கள் அவகாசம் அளிக்க வேண்டும் என்ற நிபந்தனையின் காரணமாக, நாங்கள் இருவரும் காத்திருந்தோம். 30 நாட்கள் முடிந்த பின்பும், எங்கள் திருமண விண்ணப்பத்தின் மீது சார் பதிவாளர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கிடையே, எனது வருங்கால கணவர் ராகுல், இங்கு தங்குவதற்கான அவகாசமும் இல்லாமல் போனது.

அவரது விடுமுறையை நீட்டிக்க வழியில்லை. இதனால் அவர் அமெரிக்கா சென்றுவிட்டார். ஆனால், திருமண பதிவு சம்பந்தமான நடவடிக்கைகளை எடுக்க அவரது சார்பில் எனக்கு முழு அதிகாரத்தை வழங்குவதாக பிரமாணப்பத்திரம் அளித்துள்ளார். அவர் மீண்டும் இந்தியா வந்தால் கடுமையான பண இழப்பை சந்திக்க நேரிடும். எனவே, நாங்கள் இருவரும் ‘வீடியோ கான்பரன்சிங்’ மூலம் திருமணம் செய்து கொள்ளவும், அந்த திருமணத்தை சிறப்பு சட்டத்தின் மூலம் பதிவு செய்யவும் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ”திருமணம் என்பது மனிதனின் அடிப்படை உரிமை. மனுதாரர்கள் தங்களின் திருமணத்தை நடத்த ஆன்லைன் முறையை தேர்ந்தெடுத்துள்ளனர். எனவே, அவர்களின் திருமணத்தை காணொலி மூலம் நடத்திக் கொள்ள அனுமதிக்கப்படுவதாக நீதிபதி தெரிவித்தார். 3 சாட்சிகள் முன்னிலையில் மனுதாரர் தன் தரப்பிலும், அவர் காதலன் ராகுல் தரப்பிலும் திருமண பதிவு புத்தகத்தில் கையெழுத்திடலாம். அதன்பின் சட்டப்படி திருமண பதிவு சான்றிதழை மணவளக்குறிச்சி சார் பதிவாளர் வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.