தாய்லாந்தில் தகவல் தொழில் நுட்ப துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மியானமருக்கு அழைத்துச் செல்லப்பட்ட தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சேர்ந்த இளைஞர்கள் இன்று சொந்த ஊர் திரும்புகின்றனர்.
தமிழகத்தைச் சேர்ந்த 50 பேர் உள்பட 300 இந்தியர்கள் மியான்மரில் இது போல சிக்கித் தவிக்கின்றனர். இவர்களை தாயகத்திற்கு திரும்ப அழைத்து வரவேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் 30 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். முதற்கட்டமாக 13 தமிழர்கள் இன்று இரவு தாயகம் திரும்ப உள்ளனர். எஞ்சியுள்ளவர்கள் படிப்படியாக மீட்கப்பட்டு அவர்களும் தாயகம் திரும்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மியான்மரில் ஒரு நாளைக்கு 15 மணி நேரம் வேலை வாங்குவதாகவும் , சட்ட விரோத பணிகளில் ஈடுபடுத்தப்படுவதாகவும் பிணை கைதிகளாக உள்ள இளைஞர்கள் வேதனை தெரிவித்து வீடியோ வெளியிட்டனர். தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இது போல தாய்லாந்தில் வேலை வாங்கித்தருவதாக கூறி அங்கு சென்று சிக்கிக் கொள்கின்றனர். பின்னர் ஆபத்தை உணர்ந்து தாயகம் திரும்ப நினைக்கின்றனர். இந்த சம்பவம் தொடர்கதையாகின்றது.
இது போன்ற சம்பவங்களைத் தடுக்க ஏமாற்றும் முகவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. மியான்மரில் சிக்கியுள்ள எஞ்சி உள்ளவர்களையும் உடனடியாக மீட்டு தாயகம் அழைத்து வர அவன செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.