ஆவடியைச் சேர்ந்த ஸ்டீபன்ராஜ்-சௌபாக்கியா இவர்களின் மூத்த மகள் சிறுமி டானிய (9), ஆறரை வருடங்களாக அரிய வகை முக சிதைவு நோயால் அவதிப்பட்டு வந்தார். தமிழக முதல்வரின் உத்தரவுக்கிணங்க ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள சவீதா மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 17ஆம் தேதி அனுமதிக்கப்பட்டு, முக சீரமைப்பு அறுவை சிகிச்சை ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. சிறுமி டானியாவை தமிழக முதல்வர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அதனைத் தொடர்ந்து 25 நாட்களுக்குப் பிறகு கடந்த செப்டம்பர் மாதம் 12ஆம் தேதி வீடு திரும்பினார்.

இந்நிலையில் சிறுமி டானியா மீண்டும் ஒரு அறுவை சிகிச்சைக்காக தற்போது ஸ்ரீபெரும்புதூர் தண்டலம் பகுதியில் சவிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் சிறுமி டானியாவிற்கு முக சீரமைப்பு அறுவை சிகிச்சை செய்த பக்கமுள்ள கண் மூடுவதற்கு சிரமபடுவதாலும், சாப்பிடுவதற்கு வாய் திறக்க அவதிப்படுவதாலும் இந்த அறுவை சிகிச்சை நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போது சிறுமி டானியா சில நாட்கள் மருத்துவரின் முழு கண்காணிப்பில் இருந்து முழு உடல் பரிசோதனைக்கு பிறகு முக சீரமைப்பு செய்யப்பட்ட பகுதியில் மீண்டும் அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.