நடப்பாண்டில் உலகளவில் பொருளாதார மந்தநிலை வரும் என்ற அச்சம் அதிகரித்துள்ளதால், பெரும்பாலான தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வேலையை விட்டு தூக்கி வருகின்றன. பெரு நிறுவனங்கள் முதல் சிறிய நிறுவனங்கள் வரை பெரியளவில் பணிநீக்க அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. இதனால், ஐடி துறை பணியாளர்கள் தங்களின் எதிர்காலத்தை நினைத்து அச்சத்தில் உள்ளனர். அதன் தொடர்ச்சியாக, இந்தியாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நிறுவனத்தில் பணிநீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல் வெளியானது. இது ஊழியர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை மனித வள அதிகாரி மிலிந்த் லக்காட்டி விளக்கம் அளித்துள்ளார்.
அவர் கூறுகையில், ”டிசிஎஸ் நிறுவனத்தில் பணிநீக்கம் செய்வதற்கான திட்டம் எதுவும் தற்போது இல்லை. பிற நிறுவனங்களில் சிறப்பாக பணிபுரிந்து வேலை இழந்த ஸ்டார்ட் அப் ஊழியர்களை எங்களது நிறுவனத்தில் வேலைக்கு அமர்த்த திட்டமிட்டுள்ளோம். பிற நிறுவனங்கள் அளவுக் கதிகமாக பணியாளர்களை வேலைக்கு அமர்த்தியதால், இப்போது பணிநீக்க நடவடிக்கையை எடுத்து வருகின்றன. ஆனால், டிசிஎஸ் நிறுவனத்தில் அத்தகைய நிலைமை இல்லை. 6 லட்சத்துக்கும் அதிகமானோர் பணிபுரியும் எங்களது நிறுவனத்தில் முந்தைய ஆண்டுகளை காட்டிலும் சம்பள உயர்வு நிச்சயம் இருக்கும். டிசிஎஸ் நிறுவனத்தில் ஒருவர் வேலைக்கு சேர்ந்தால் அவரின் பணி திறமையை வளர்க்க வேண்டியது எங்களது பொறுப்பு. எனவே ஊழியர்களை நீக்குவதில் கவனம் செலுத்தாமல் அவர்களின் திறமையை வளர்ப்பதில் கவனம் செலுத்தப் போகிறோம்” என்று கூறினார்.