ஆசிரியர் தகுதித் தேர்வு விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய விரும்பும் தேர்வர்கள், வரும் 11ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை திருத்தங்களை மேற்கொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
இந்திய அரசால் இயற்றப்பட்ட குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009-ன் படி, ஆசிரியர் நியமனத்திற்கான குறைந்தபட்சக் கல்வித் தகுதியாக ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தமிழகத்தில், இதற்கான தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தி வருகிறது. இந்நிலையில், இந்தாண்டு ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1 மற்றும் தாள் 2 எழுதுவதற்கான அறிவிப்பு கடந்த மார்ச் 7ஆம் தேதி வெளியானது. இதற்கான விண்ணப்பங்கள் மார்ச் 14ஆம் தேதி முதல் ஏப்ரல் 26ஆம் தேதி வரை பெறப்பட்டன.
இந்நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வு விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய விரும்பும் தேர்வர்கள், தாள்-1, தாள் 2-க்கு வரும் 11ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் திருத்தங்களை மேற்கொள்ளலாம். மேலும், ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1-க்கு 2,30,878 பேரும், தாள் 2-க்கு 4,01,886 என மொத்தமாக 6,32,764 பேர் விண்ணப்பித்துள்ளனர் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.