பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டால் 5 ஆண்டுகளுக்கு பணியிட மாறுதல் கிடையாது என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதாவது புதிய ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டால், 5 ஆண்டுகளுக்கு ஒரே இடத்தில் பணியாற்ற வேண்டும். இந்த ஆசிரியர்கள் வட மாவட்டங்களில் காலியாக உள்ள பணியிடங்களில், பணியமர்த்தப்பட உள்ளனர். குறிப்பாக திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் காலியிடங்கள் அதிகமாக உள்ள நிலையில், அவை நிரப்பப்பட உள்ளன.
இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் குமரகுருபரன், பள்ளிக் கல்வி இயக்குநருக்குக் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், ”ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மை அமைப்பால் அனுமதிக்கப்பட்ட அளவைவிட உபரியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை, அதிகமாக காலியாக உள்ள மாவட்டங்களில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் எண்ணிக்கையுடைய பள்ளிகளுக்கு பணிநிரவல் செய்யப்பட வேண்டும். பணிநிரவல் செய்யப்பட்ட விவரத்தை, பணிநிரவல் முடிவுற்ற 15 தினங்களுக்குள் அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
பிரதி ஆண்டு ஜூன் 1ஆம் தேதியன்று உள்ளவாறு ஆசிரியர் பணியிடங்களைக் கணக்கில் கொண்டு அதே ஆண்டு ஜூன் 30ஆம் தேதிக்குள் பணிநிரவலை முடித்து ஜூலை 1ஆம் நாளன்று காலிப்பணியிட மதிப்பீட்டினை அரசு அனுமதிக்கு அனுப்ப வேண்டும். தற்போது பட்டதாரி ஆசிரியர் 2,000 பணியிடங்களை நிரப்பிக் கொள்ள அனுமதிக்கப்பட்டதில் தேர்வாகும் தேர்வர்களை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் அதிகமாக காலியாக உள்ள கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் முன்னுரிமை அடிப்படையில் நியமனம் செய்யப்பட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.